அத்தியாயம் 7
618 சொற்கள் · முடிந்த கதை
மறுநாள் காலையில் மாளிகை வழக்கம்போல இயங்கத் தொடங்கியது.
சோமசுந்தரன், ராஜசேகரன், சூர்யதேவ் ஆகிய மூவரும் எஸ்டேட் மற்றும் தேயிலைத் தொழிற்சாலை வேலைகளைக் கவனிப்பதற்காகப் புறப்பட்டனர். வீட்டில் இருந்த மற்றவர்களுக்கும் அன்றாட வேலைகள் தொடங்கின.
ஆனால் கீர்த்தனாவால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
சூர்யதேவ் இரவில் கூறிய வார்த்தைகள் மட்டுமே அவள் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்தன.
‘நான் யோசிச்சு ஒரு வழி சொல்றேன்.’
அவன் என்ன முடிவு செய்யப் போகிறான்?
குழந்தையைப் பற்றி வீட்டில் சொல்லப் போகிறானா?
சர்வேஷை அழைத்து வரப் போகிறானா?
அல்லது தன்னைக் குழந்தையை அழிக்கச் சொல்லப் போகிறானா?
ஒவ்வொரு சாத்தியத்தையும் நினைத்து அவள் பயந்தாள். சூர்யதேவ் கிளம்புவதற்கு முன்பு தன்னிடம் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்திருந்தாள். ஆனால் அவன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டான்.
மதியத்திற்குப் பிறகும் அவனிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.
பொறுமையை இழந்த கீர்த்தனா அவனுடைய எண்ணுக்கு அழைத்தாள். அழைப்பு முழுவதுமாகச் சென்றது. ஆனால் அவன் எடுக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து மீண்டும் முயன்றாள். இந்த முறையும் பதில் இல்லை.
வேலையில் இருப்பதால் எடுக்காமல் இருக்கலாம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாலும், அவளுடைய பயம் குறையவில்லை.
மாலை ஆறு மணியைக் கடந்ததும் வீட்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள். வழக்கமாக சூர்யதேவ் வரும் கார் சத்தம் கேட்டபோதெல்லாம் எழுந்து பார்த்தாள்.
சரியாக ஏழு மணியளவில் அவனுடைய கார் வீட்டின் முன்பு வந்து நின்றது.
சூர்யதேவ் உள்ளே வந்ததும் கீர்த்தனா அவனருகே சென்றாள்.
“அத்தான்…”
அவள் முகத்தைப் பார்த்ததும் என்ன கேட்கப் போகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.
“என்ன?”
“நீங்க ஏதாவது முடிவு பண்ணினீங்களா? ரொம்ப பயமா இருக்கு அத்தான். காலையிலிருந்து உங்களுக்குப் போன் பண்ணினேன். நீங்க எடுக்கவே இல்ல.”
“வேலையில இருந்தேன். அதனால எடுக்க முடியல.”
“என்ன செய்யப் போறோம்னு சொல்லுங்க அத்தான். என்னால இந்தப் பயத்தோட இருக்க முடியல.”
“பொறுமையா இரு. இன்னைக்குள்ள ஒரு முடிவு பண்ணிடலாம்.”
அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அவன் தன்னுடைய அறைக்குச் சென்றான்.
சிறிது நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக்குத் திரும்பினர். காயத்ரியும் சவுந்தர்யாவும் இரவு உணவை எடுத்து வைக்கத் தொடங்கினர். சோமசுந்தரன், ராஜசேகரன், கணேஷமூர்த்தி ஆகியோர் சாப்பாட்டு அறையில் அமர்ந்தனர்.
கீர்த்தனா மட்டும் தன் அறையிலேயே இருந்தாள்.
அவள் வராததைக் கவனித்த சூர்யதேவ் தாயிடம் கேட்டான்.
“அம்மா, கீர்த்தனா எங்கே?”
“அவ ரூம்ல இருக்கா. சாப்பிட வரல.”
“அவளையும் கூப்பிடுங்கம்மா. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.”
காயத்ரி சாப்பாட்டு அறையிலிருந்தபடியே குரல் கொடுத்தார்.
“கீர்த்தனா, இங்க வாம்மா.”
சிறிது நேரத்தில் கீர்த்தனா தயக்கத்துடன் வந்து நின்றாள்.
“உட்காரு,” என்றான் சூர்யதேவ்.
“எனக்குப் பசிக்கல அத்தான்.”
“காலையிலிருந்து சரியா சாப்பிடாம இருக்க. இப்பவும் பசிக்கலைன்னு சொல்லாதே. உட்கார்ந்து சாப்பிடு.”
அவன் குரலில் வழக்கமான கண்டிப்பு இருந்தாலும், அதன் பின்னால் இருந்த அக்கறை கீர்த்தனாவுக்குப் புரிந்தது. அமைதியாக அமர்ந்து தட்டில் பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிடத் தொடங்கினாள்.
அவள் சில கவளங்கள் சாப்பிடும்வரை சூர்யதேவ் எதுவும் பேசவில்லை.
எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு அவன் தந்தையைப் பார்த்தான்.
“அப்பா, எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”
சோமசுந்தரன் அவனைப் பார்த்தார்.
“என்னப்பா? சொல்லு.”
அங்கிருந்த மற்றவர்களின் கவனமும் சூர்யதேவின் மீது திரும்பியது.
“நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன்பா.”
“என்ன முடிவு?”
“நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.”
அவன் கூறியதைக் கேட்டதும் காயத்ரியின் முகம் உடனடியாக மலர்ந்தது. சவுந்தர்யாவும் மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்தார்.
“உண்மையாவா தேவ்?” என்று காயத்ரி கேட்டார்.
“ஆமாம்மா.”
“இதுக்காகத்தானே நாங்க இத்தனை நாளா காத்திருக்கோம்! பொண்ணு பார்க்கச் சொல்லிடலாமா? நல்ல இடமா பார்த்துப் பேசினா ஒரு மாசத்துக்குள்ள கல்யாணத்தையே முடிச்சிடலாம்.”
சோமசுந்தரனும் மகிழ்ச்சியுடன் சிரித்தார்.
“உனக்குப் பொண்ணு கொடுக்க எத்தனையோ குடும்பங்கள் போட்டி போட்டு வருவாங்கப்பா. நமக்குப் பொண்ணு கிடைக்கிறதுல எந்தப் பிரச்சனையும் இருக்காது. நீ சம்மதிச்சதே போதும். நாளையிலிருந்தே பார்க்க ஆரம்பிச்சிடலாம்.”
“அதுக்கு அவசியம் இல்லப்பா.”
அனைவரும் புரியாமல் அவனைப் பார்த்தனர்.
“ஏன்?”
“நானே பொண்ணைப் பார்த்துட்டேன்.”
ஒரு நொடி அங்கு அமைதி நிலவியது.
காயத்ரி மகனை ஆச்சரியத்துடன் பார்த்தார்.
“என்னடா சொல்ற? நீ யாரையாவது காதலிக்கிறியா?”
“எங்களுக்கே தெரியாம எப்ப இருந்து இதெல்லாம் நடக்குது?” என்று ராஜசேகரனும் கேட்டார்.
“நீ அப்படிப்பட்ட பையன் இல்லையே. யாருப்பா அந்தப் பொண்ணு?” என்றார் சோமசுந்தரன்.
அவன் சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டுப் பேசினான்.
“நான் கீர்த்தனாவைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்பா.”
அந்த ஒரு வாக்கியம் கீர்த்தனாவை உறைய வைத்தது.
சவுந்தர்யாவின் முகத்தில் உடனடியாக மகிழ்ச்சி தோன்றியது. கணேஷமூர்த்தியும் எதிர்பாராத அந்தச் செய்தியில் ஆச்சரியத்துடன் மகளைப் பார்த்தார்.
சோமசுந்தரன் சில நொடிகள் யோசித்தார்.
“கீர்த்தனாவையா?”
“ஆமாப்பா. இந்த எண்ணம் எனக்கு ரொம்ப நாளாவே இருக்கு. இப்பதான் உங்ககிட்ட சொல்லணும்னு முடிவு பண்ணினேன்.”
காயத்ரியின் முகத்தில் மட்டும் மகிழ்ச்சியோடு குழப்பமும் கலந்திருந்தது.
கீர்த்தனாவைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சில நாட்களுக்கு முன்பு அவர்தான் மகனிடம் கேட்டிருந்தார். அப்போது வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி உறுதியாக மறுத்தவன், இப்போது நீண்ட நாட்களாகவே அந்த எண்ணம் இருப்பதாகக் கூறுகிறான்.
அவர் மகனுடைய முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தார். ஆனால் சூர்யதேவின் முகத்திலிருந்து எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
“எனக்கு இதுல எந்தப் பிரச்சனையும் இல்லப்பா,” என்றார் சோமசுந்தரன். “கீர்த்தனாவுக்கும், சவுந்தர்யா–கணேஷமூர்த்திக்கும் சம்மதம்னா நம்ம குடும்பத்துக்குள்ளேயே முறையா பேசி முடிச்சிடலாம். நம்ம வீட்டுல வளர்ந்த பொண்ணு. அவளைவிட நல்ல பொண்ணு உனக்கு அமையுமா?”
ராஜசேகரனின் முகத்திலும் மகிழ்ச்சி தோன்றியது.
“ரொம்ப நல்ல முடிவு தேவ். என் பையன்தான் எங்க பேச்சைக் கேட்காம அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டான். நீயாவது நம்ம குடும்பத்துக்குள்ளேயே ஒரு நல்ல பொண்ணைப் பார்த்திருக்க. இதைவிட எங்களுக்கு வேற என்ன சந்தோஷம்?”
சவுந்தர்யா கணவரைப் பார்த்தார். கணேஷமூர்த்தியும் மகளைப் பார்த்தபடி அமைதியாக இருந்தார்.
கீர்த்தனாவால் சுற்றிலும் நடக்கும் எதையும் முழுமையாக உணர முடியவில்லை.
சில மணி நேரங்களுக்கு முன்புவரை தன்னுடைய கர்ப்பத்தைப் பற்றி சூர்யதேவ் என்ன முடிவு எடுப்பான் என்று பயந்துகொண்டிருந்தாள். ஆனால் இப்போது, அனைவருடைய முன்னிலையிலும் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக அவன் அறிவித்திருந்தான்.
கீர்த்தனா பேயறைந்ததைப்போல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
கருத்துகள்
கருத்து இட உள்நுழையவும்கருத்துகள் இன்னும் இல்லை.