← வரமாய் வந்தவனே
அத்தியாயம் 10

அத்தியாயம் 10

881 சொற்கள் · முடிந்த கதை

முகூர்த்தச் சடங்குகள் முடிந்த பிறகு மணமக்கள் இருவரும் மேடையில் அருகருகே நின்றனர்.

உறவினர்களும் குடும்ப நண்பர்களும் தொழில்துறை நண்பர்களும் வரிசையாக வந்து வாழ்த்துக் கூறினர். பரிசுகளைக் கொடுத்து மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு ஒவ்வொருவராக நகர்ந்தனர்.

சூர்யதேவ் இயல்பாகவே இருந்தான். திருமணம் தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற வேண்டிய ஒரு நிகழ்வு என்பதுபோல் அமைதியாகவும் நிதானமாகவும் அனைவருடைய வாழ்த்துகளையும் ஏற்றுக்கொண்டான்.

கீர்த்தனாவால் மட்டும் அவனைப்போல் இருக்க முடியவில்லை.

முகத்தில் வெளிப்படையாக வருத்தத்தைக் காட்டக்கூடாது என்று முயன்றாலும், அவளுடைய தயக்கத்தையும் கலக்கத்தையும் முழுமையாக மறைக்க முடியவில்லை. ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கேமராவைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றாள். ஆனால் அந்தப் புன்னகை அவள் கண்களை எட்டவில்லை.

சில நிமிடங்கள் அவளைக் கவனித்த சூர்யதேவ், தன்னுடைய வலது கையால் அவளுடைய இடது கையைப் பிடித்தான். அவளுடைய ஐந்து விரல்களையும் தனது விரல்களுக்குள் அடக்கிக்கொண்டு சொன்னான்.

“கீர்த்தனா, நடந்தது நடந்து போச்சு. இப்ப நமக்குக் கல்யாணம் நடந்து முடிஞ்சிருக்கு. இதையாவது சந்தோஷமா அனுபவிக்கப் பாரு.”

அவள் அவனைப் பார்த்தாள்.

“இப்படி முகத்தை வச்சுக்கிட்டு நின்னா பார்க்கிறவங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும். நாளைக்கு எல்லாப் பிரச்சனையும் சரியாகி நம்ம வாழ்க்கை நல்லபடியா போகும்போது, இந்தப் போட்டோவும் வீடியோவும்தான் நமக்கு நினைவா இருக்கும். அதுல உன்னோட இந்தக் கலங்கிய முகம்தான் தெரியும். எதைப் பற்றியும் இப்ப கவலைப்படாதே. கொஞ்சம் இயல்பா சிரிச்சுட்டு இரு.”

“சரி அத்தான்,” என்றாள் கீர்த்தனா.

அவன் சொன்னதால் முகத்தில் சிறிய புன்னகையை வரவழைக்க முயன்றாள். அதற்குமேல் அவளிடம் எந்த மாற்றமும் வரவில்லை.

சிறிது நேரத்தில் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ராஜசேகரன் மேடைக்கு வந்தபோது கையில் இரண்டு பரிசுப் பெட்டிகளை வைத்திருந்தார். ஒன்றைத் திறந்து, அழகான தங்கப் பிரேஸ்லெட்டைச் சூர்யதேவின் கையில் அணிவித்தார்.

“நல்லபடியா சந்தோஷமா இரு தேவ்,” என்று வாழ்த்தினார்.

அடுத்த பெட்டியிலிருந்த இரண்டு தங்க வளையல்களையும் கீர்த்தனாவின் கைகளில் அணிவித்தார்.

இருவரையும் ஒரே நேரத்தில் பார்த்த ராஜசேகரனின் முகத்தில் மனநிறைவு தெரிந்தது.

“ரெண்டு பேரும் எப்பவும் ஒற்றுமையா இருக்கணும்,” என்று ஆசீர்வதித்தார்.

அடுத்ததாகச் சர்வேஷும் ஹரிணியும் ஒரு பரிசுடன் மேடைக்கு வந்தனர்.

“அண்ணே, வாழ்த்துகள்,” என்றான் சர்வேஷ்.

சூர்யதேவ் அவன் முகத்தையே பார்த்தான். எந்தப் பதிலும் சொல்லவில்லை.

ஹரிணி கீர்த்தனாவின் அருகில் சென்று, “வாழ்த்துகள் கீர்த்தனா. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்,” என்றாள்.

“நன்றி,” என்று மட்டும் கூறினாள் கீர்த்தனா.

சர்வேஷ் தன் கையிலிருந்த பரிசுப் பெட்டியைச் சூர்யதேவிடம் நீட்டினான். சூர்யதேவ் அதை வாங்குவதற்குள் அவன் கையை விட்டுவிட, பரிசுப் பெட்டி கீழே விழுந்தது.

அருகில் நின்றவர்கள் அந்தச் சத்தத்தில் திரும்பிப் பார்த்தனர்.

“சாரி அண்ணே. கவனிக்காம கையை விட்டுட்டேன்,” என்றான் சர்வேஷ்.

அருகிலிருந்த காயத்ரி உடனே குனிந்து பரிசுப் பெட்டியை எடுத்தார்.

“கை தவறிடுச்சும்மா,” என்று சூர்யதேவ் சாதாரணமாகக் கூறினான்.

“பரவாயில்லப்பா. அதுக்கென்ன?” என்ற காயத்ரி, பரிசை மற்ற பொருட்களுடன் ஓரமாக வைத்தார்.

சூர்யதேவ் அந்தப் பெட்டியைக் கையால் தொடவே இல்லை.

புகைப்படக்காரர் சர்வேஷையும் ஹரிணியையும் மணமக்களின் அருகில் நிற்கச் செய்தார். சூர்யதேவுக்குப் பக்கத்தில் சர்வேஷும், கீர்த்தனாவுக்குப் பக்கத்தில் ஹரிணியும் நின்றனர். நான்கு பேரையும் சேர்த்துப் புகைப்படம் எடுத்த பிறகு சர்வேஷும் ஹரிணியும் மேடையிலிருந்து இறங்கினர்.

தொடர்ந்து வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினர். மெதுவாகக் கூட்டம் குறையத் தொடங்கியது.

அப்போது சூர்யதேவ் அருகே நின்றிருந்த புகைப்படக்காரனைக் கையசைத்து அழைத்தான். அவன் நெருங்கி வந்ததும், அவனுடைய காதருகே ஏதோ சொன்னான்.

“சரிங்க சார்,” என்று தலையசைத்த புகைப்படக்காரன் அங்கிருந்து நகர்ந்தான்.

சிறிது நேரத்தில் மணமக்களும் நெருங்கிய குடும்பத்தினரும் உணவருந்த அழைத்துச் செல்லப்பட்டனர்.

சூர்யதேவும் கீர்த்தனாவும் அருகருகே அமர்ந்தனர். அவர்களைச் சுற்றி சோமசுந்தரன், காயத்ரி, ராஜசேகரன், கணேஷமூர்த்தி, சவுந்தர்யா ஆகியோர் உட்கார்ந்தனர்.

சர்வேஷையும் ஹரிணியையும் அங்கு காணாத சவுந்தர்யா எழுந்துகொள்ள முயன்றார்.

“சர்வேஷையும் ஹரிணியையும் காணோமே. நான் போய்க் கூட்டிட்டு வர்றேன்.”

“அத்தை, அவன் ஏற்கெனவே சாப்பிட்டிருப்பான். நேரமாயிடுச்சு. நீங்க உட்காருங்க. நாம சாப்பிட்டு முடிச்சு வீட்டுக்குப் போனாதான் மத்த வேலைகள் நேரத்துக்கு நடக்கும்,” என்றான் சூர்யதேவ்.

“சரி,” என்று சவுந்தர்யாவும் அமர்ந்துகொண்டார்.

மணமக்களுக்கும் குடும்பத்தினருக்கும் சைவத்தில் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.

அவர்கள் சாப்பிட ஆரம்பித்ததும் புகைப்படக்காரரும் வீடியோகிராபரும் அருகில் வந்தனர்.

“சார், மேடத்துக்கு நீங்க கொஞ்சம் ஊட்டிவிடுங்க. நல்ல ஸ்டில் எடுக்கலாம்,” என்றார் புகைப்படக்காரர்.

அதைக் கேட்டதும் கீர்த்தனா தயக்கத்துடன் சூர்யதேவைப் பார்த்தாள்.

சூர்யதேவோ அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இலையிலிருந்து சிறிது உணவை எடுத்துக் கீர்த்தனாவின் வாயருகே கொண்டு சென்றான்.

அவள் அசையாமல் அவனையே பார்த்தாள்.

“வாயைத் திற,” என்றான் மெதுவாக.

சுற்றிலும் குடும்பத்தினரும் கேமராக்களும் இருப்பதை உணர்ந்த கீர்த்தனா தயக்கத்துடன் வாயைத் திறந்தாள். அவள் உடையில் உணவு சிந்திவிடாமல் மறுகையை அவளுடைய தாடைக்குக் கீழே வைத்தபடி அவன் ஊட்டிவிட்டான்.

“சார், ரெண்டு பேரும் கேமராவைப் பாருங்க,” என்ற புகைப்படக்காரர்.

சூர்யதேவ் கேமராவை நோக்கித் திரும்பினான். கீர்த்தனாவும் அவனருகே சிறிது சாய்ந்து கேமராவைப் பார்த்தாள்.

“அப்படியே ஒரு நிமிஷம் இருங்க. நல்லா இருக்கு.”

சில புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகு, புகைப்படக்காரர் கீர்த்தனாவைப் பார்த்தார்.

“மேடம், இப்ப நீங்க சாருக்கு ஊட்டிவிடுங்க.”

“இல்ல, இருக்கட்டும். அவர் ஊட்டிவிட்டாரே, அது போதும்,” என்றாள் கீர்த்தனா.

“கீர்த்தனா, இந்தப் போட்டோக்கள் வாழ்க்கை முழுக்க இருக்கப் போகுது. அவங்க சொல்ற மாதிரி செய்,” என்றான் சூர்யதேவ்.

அவன் கூறியதும் மறுப்பதற்குத் தயங்கிய கீர்த்தனா சிறிது உணவை எடுத்துச் சூர்யதேவுக்கு ஊட்டினாள்.

“மேடம், கேமராவைப் பாருங்க. சார், நீங்களும் கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்புங்க.”

இருவரும் புகைப்படக்காரர் கூறியபடி சில நொடிகள் அமர்ந்தனர். தேவையான புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் எடுத்த பிறகு கேமரா குழு அங்கிருந்து நகர்ந்தது.

அனைவரும் உணவருந்தி முடித்து கைகளைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தபோதுதான் சர்வேஷும் ஹரிணியும் அங்கு வந்தனர்.

“என்ன, எல்லாரும் சாப்பிட்டுட்டீங்களா?” என்று சர்வேஷ் கேட்டான்.

“ஆமா,” என்றான் சூர்யதேவ்.

“நீங்க வருவீங்கன்னு நினைச்சு நாங்க மண்டபத்துல காத்திருந்தோம். இன்னும் சாப்பிடல.”

“அப்படியா? நீ சாப்பிட்டிருப்பன்னு நினைச்சேன். சரி, போய்ச் சாப்பிடு.”

அதோடு சூர்யதேவ் அந்தப் பேச்சை முடித்துக்கொண்டான்.

திருமண மண்டபத்திலிருந்த வேலைகள் முடிந்த பிறகு மணமக்களும் குடும்பத்தினரும் மாளிகைக்குத் திரும்பினர்.

சூர்யதேவுக்கு அது ஏற்கெனவே வாழ்ந்துகொண்டிருந்த வீடு. கீர்த்தனாவும் பிறந்தது முதலே அதே குடும்பத்தில், அந்த மாளிகையில் வளர்ந்தவள். அதனால் புதிய வீட்டிற்குள் நுழைவது போன்ற அந்நியமான உணர்வு இருவருக்கும் இல்லை.

அவர்கள் வழக்கம்போல் வீட்டிற்குள் செல்ல முயன்றபோது காயத்ரியும் சவுந்தர்யாவும் வாசலில் தடுத்து நிறுத்தினர்.

“நில்லுங்க. ஆரத்தி எடுத்துட்டு வர்றோம்,” என்று கூறிவிட்டு உள்ளே சென்றனர்.

சிறிது நேரத்தில் ஆரத்தித் தட்டுடன் திரும்பியவர்கள் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தனர். பிறகு வாசலின் நடுவே நிறைநாழியில் நெல்லை நிரப்பி வைத்தனர்.

“கீர்த்தனா, வலது காலால் இதை மெதுவா வீட்டுக்குள்ள தள்ளிவிட்டு, வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாம்மா,” என்றார் காயத்ரி.

கீர்த்தனா தன்னுடைய வலது காலால் நிறைநாழியை மெதுவாகத் தள்ளினாள். அதிலிருந்த நெல் வீட்டிற்குள் பரவியது. பிறகு வலது காலை முதலில் வைத்து சூர்யதேவுடன் உள்ளே நுழைந்தாள்.

“போமா. பூஜை அறையில விளக்கேத்து,” என்றார் காயத்ரி.

அதைக் கேட்ட சூர்யதேவ் சிரித்தான்.

“ஏம்மா, அவ என்ன இந்த வீட்டுக்குப் புதுசாவா வந்திருக்கா? எத்தனையோ நாள் இந்த வீட்டுல விளக்கேத்தியிருக்கா. இப்ப புதுசா விளக்கேத்தச் சொல்றீங்க?”

“டேய், இதெல்லாம் முறை. வேற வீட்டிலிருந்து பொண்ணு வந்திருந்தா எல்லாச் சடங்கையும் செய்வோம்ல? நம்ம வீட்டு பொண்ணுங்கிறதுக்காக அவளுக்கு மட்டும் எந்த முறையையும் குறைக்க முடியாது. கல்யாணமாகி இந்த வீட்டுக்கு மருமகளா வர்றது இதுதான் முதல் முறை.”

“ஆமா, நீங்க சொல்றதும் சரிதான். முறைப்படி என்ன செய்யணுமோ செய்யுங்கம்மா.”

கீர்த்தனா பூஜை அறைக்குள் சென்று குத்துவிளக்கை ஏற்றினாள். சூர்யதேவ் அவளருகே நின்றான். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கடவுளை வணங்கினர்.

பிறகு மணமக்கள் முதலில் சோமசுந்தரன்–காயத்ரி தம்பதியரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அடுத்ததாக ராஜசேகரனிடமும், பின்னர் கணேஷமூர்த்தி–சவுந்தர்யா தம்பதியரிடமும் ஆசீர்வாதம் வாங்கினர்.

அனைத்துச் சடங்குகளையும் ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த ஹரிணி, சர்வேஷின் காதருகே சொன்னாள்.

“நம்ம கல்யாணத்துக்கு இதுல எதுவுமே நடக்கல. அண்ணனுக்குப் பாருங்க, எல்லாமே எவ்வளவு முறையா, சிறப்பா நடக்குது.”

“நீதான அவசரப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்ன. நான் என்ன செய்ய முடியும்?” என்றான் சர்வேஷ்.

“உன்னைக் குறை சொல்லல. இதைப் பார்க்கும்போது கொஞ்சம் ஏக்கமா இருக்குன்னுதான் சொன்னேன்.”

“சரி, விடு. அதைப் பற்றி இப்ப பேச வேண்டாம்.”

சர்வேஷ் அந்தப் பேச்சை முடித்தாலும், அவன் மனம் வேறு ஏதோ சிந்தனையில் இருந்தது.

மணமக்களை வரவேற்கும் சடங்குகள் முடிந்ததும் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்தனர். மண்டபத்துக்கு வர முடியாத வயதான உறவினர்களும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் புதுமணத் தம்பதிகளைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வரத் தொடங்கினர்.

இந்த அத்தியாயத்தைப் புகார் அளிக்க

மதிப்பீடு

முதல் மதிப்பீட்டை வழங்குங்கள்

மதிப்பீடு வழங்க உள்நுழையவும்

கருத்துகள்

கருத்து இட உள்நுழையவும்

கருத்துகள் இன்னும் இல்லை.