அத்தியாயம் 1
941 சொற்கள் · முடிந்த கதை
பழநி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் அந்த அழகிய கிராமம் மயில்வனம். முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான பழநி மலைக்கோவிலின் ராஜகோபுரம், அந்த ஊரின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் கம்பீரமாகத் தெரியும். மலையில் வீற்றிருக்கும் முருகனின் ஆசி மொத்த ஊரையும் அரவணைப்பது போன்றதொரு உணர்வைத் தரும். அந்த மலையடிவாரத்தின் அமைதி, வீசும் தென்றலில் கலந்திருக்கும் விபூதி மற்றும் ஊதுபத்தியின் மணம் என அந்த இடமே ஒரு தெய்வீகமான சூழலில் மூழ்கியிருந்தது.
அங்குதான் நம் கதையின் நாயகி தெய்வானையின் குடும்பம் வசித்து வந்தது. தெய்வானைக்கு இப்போது இருபத்தாறு வயது. ஜர்னலிசம் படித்து முடித்திருக்கும் அவள், எதையும் தீர விசாரிக்கும் இயல்பும், தெளிவான பார்வையும் கொண்டவள். அவளுடைய தந்தை ராஜரத்தினம், தமிழ்நாடு அரசின் ஒரு அலுவலகத்தில் க்ளர்க் பதவியில் இருந்து சமீபத்தில் தான் ஓய்வு பெற்றிருந்தார். அம்மா செண்பகவடிவு, வீட்டைத் தாங்கும் தூணாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறார். தெய்வானைக்கு அவளை விட பத்து வயது இளைய தம்பி இருக்கிறான். பதினாறு வயதாகும் அந்தத் தம்பி, குடும்பத்தின் செல்லப் பிள்ளை.
மார்கழி மாதத்துக் குளிர் மெல்ல விலகிக் கொண்டிருந்த ஒரு அதிகாலை நேரம். தைப்பூசம் நெருங்கிக் கொண்டிருந்ததால், முருக பக்தர்கள் அனைவரும் தீவிரமான விரதத்தில் இருந்தார்கள். தெய்வானையின் குடும்பமும் முருகனின் தீவிர பக்தர்கள் என்பதால், அன்று காலை அவர்கள் அனைவரும் பழநி மலைக்குச் செல்லத் தயாரானார்கள்.
மலையடிவாரத்தில் இருந்து அவர்கள் நால்வரும் மெல்ல மெல்ல படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினார்கள். சுற்றி எங்கும் "அரோகரா" முழக்கம் எதிரொலிக்க, பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. படிக்கட்டுகளில் ஏறும்போதே செண்பகவடிவு முருகனின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டு வர, ராஜரத்தினம் அதை ஆமோதித்தபடி நடந்தார். தெய்வானை தன் தம்பியின் கையைப் பிடித்தபடி, மலையின் இயற்கை அழகையும் கோபுரத்தின் பிரம்மாண்டத்தையும் ரசித்தவாறே மேலே சென்றாள்.
மலை ஏறிக்கொண்டிருக்கும்போது இடும்பன் சன்னதி வந்தது. அங்கேயே தெய்வானை முருகனுக்காக வாங்கி வந்த மூன்று மாலைகளையும் தன் கழுத்தில் அணிந்துகொண்டாள். அதன் பிறகு அவர்கள் மேலே சென்று முருகப்பெருமானை தரிசித்து, மனநிறைவோடு கும்பிட்டு கீழே இறங்கி வந்தார்கள்.
அடிவாரத்தில் இருந்து தங்களின் இருசக்கர வாகனங்களில் வீடு நோக்கிப் புறப்பட்டனர். தெய்வானை தன் தம்பியுடன் ஒரு வண்டியில் வந்தாள். மற்றொரு வண்டியில் ராஜரத்தினமும் செண்பகவடிவும் வந்தார்கள்.
திடீரென்று எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. தெய்வானையும் அவளுடைய தம்பியும் வந்த ஸ்கூட்டி முன்னால் சென்றுகொண்டிருந்தது. பின்னால் கொஞ்சம் தூரத்தில் ராஜரத்தினமும் செண்பகவடிவும் வந்துகொண்டிருந்தார்கள். ஒரு வளைவைத் திரும்பியவுடன் எதிரே வந்த ஒரு பைக் வேகமாக அருகில் வந்து லேசாக ஸ்கூட்டியைத் தட்டியது. அந்தத் தட்டுதலில் ஸ்கூட்டி சமநிலையை இழந்தது.
ஒரு கணத்தில் தெய்வானையும் அவளுடைய தம்பியும் வண்டியிலிருந்து கீழே சறுக்கி விழுந்தார்கள். அதிர்ச்சியில் அவர்கள் இருவரும் சில நொடிகள் அப்படியே தரையில் இருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. தெய்வானை முதலில் எழுந்து தன் தம்பியை எழுப்பினாள். அவன் பயந்த முகத்துடன் சுற்றி பார்த்தான். அவர்கள் கீழே விழுந்த அந்த குழப்பத்தில், தெய்வானையின் கழுத்தில் இருந்த மாலைகளில் ஒன்று ஸ்கூட்டியின் ஹேண்டில் பாரில் மாட்டி அறுந்து கீழே விழுந்தது.
அதற்குள் பின்னால் வந்துகொண்டிருந்த ராஜரத்தினமும் செண்பகவடிவும் வண்டியை விரைவாக நிறுத்தி ஓடிவந்தார்கள். "என்னாச்சு? காயம் எதுவும் பட்டுதா?" என்று பதற்றத்துடன் கேட்டார்கள். தெய்வானை "ஒன்னும் இல்ல அப்பா... லேசாகத் தட்டிச்சு" என்று சொல்லி தன் தம்பியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த பைக் ஓட்டியவன் வண்டியை ஓரமாக நிறுத்தி திரும்பிப் பார்த்தான். செண்பகவடிவு இன்னும் பதற்றத்திலேயே இருந்தார். "பார்த்து வரமாட்டீங்களா? இப்போதான் சாமியை கும்பிட்டு வரோம்... இப்படி தட்டி கீழே தள்ளிட்டீங்களே!" என்று சற்று கோபத்தோடு சொன்னார். அவன் ஏதோ விளக்கம் சொல்ல முயன்றான். அந்தச் சிறிய பரபரப்புக்குள் தெய்வானையின் கவனம் மீண்டும் கீழே கிடந்த மாலையிலேயே சென்றது. அவள் அதை எடுத்து பார்த்தபோது தான் அது அறுந்து விட்டதை தெளிவாக உணர்ந்தாள்.
இதைப்பார்த்த செண்பகவடிவின் முகம் அப்படியே மாறிவிட்டது. "ஐயோ! இப்பதானே சாமியை கும்பிட்டு வரோம்.. அதுக்குள்ள இப்படி மாலை அறுந்து விழுந்துடுச்சே? முருகன் ஏதோ அறிகுறி காட்டுறாரோ? ஏதோ கெட்டது நடக்கப்போகுதோ?" என்று பதற்றத்தோடு புலம்பத் தொடங்கினார். ராஜரத்தினமும் சற்றுத் திகைத்து நின்றார். மொத்தக் குடும்பமும் அந்தச் சிறு சம்பவத்தால் மிகுந்த மனக்கஷ்டத்தில் ஆழ்ந்தது.
அப்போது, அந்தப் பாதையில் அழுக்கான உடைகளை அணிந்த ஒரு மனிதர் மெல்ல நடந்து வந்தார். அவர் பார்ப்பதற்கு ஒரு பித்தன் போலவும், அதே சமயம் ஒரு சித்தரைப் போலவும் இருந்தார். மேலாடை ஏதுமின்றி, இடுப்பில் ஒரு சிறிய வேட்டியை மட்டும் கட்டியிருந்த அவர், யாரிடமும் பேசாமல் தன்னுள் தானே ஏதோ பேசிக்கொண்டு நடந்தார்.
அவர்கள் அருகில் வரும்போது, அவர் திடீரென உரத்த குரலில் சொல்லத் தொடங்கினார், "முருகன்.. அவன் அறிகுறி காட்டுறானா? அவனுக்கு எல்லாம் தெரியும்! நீ ஏன் கவலைப்படுற? உன் வாழ்க்கையில இனிமேதான் பெரிய மாற்றங்கள் நடக்கப்போகுது!" என்று கத்தினார். யாரிடமும் முகம் கொடுத்துப் பேசாத அவர், விண்ணைப் பார்த்துச் சிரித்தபடி, சத்தமாகத் தனக்குள்ளேயே பேசிக்கொண்டு அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்.
தெய்வானை அந்த மனிதரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த மாலை அறுந்ததற்கும், அவர் சொன்ன அந்த 'மாற்றங்களுக்கும்' ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல அவளுக்குத் தோன்றியது.
மாலை அறுந்து விழுந்ததைக் கண்டதும் குடும்பமே ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தது. அந்த அபசகுனத்தை நினைத்து செண்பகவடிவின் மனம் மிகவும் பதைபதைத்தது. வேறு வழியின்றி, மீண்டும் கடைகள் இருக்கும் பகுதிக்குச் சென்று ஒரு மாலையை புதிதாக வாங்கிக்கொண்டார்கள். அங்கேயே அருகிலிருந்த விநாயகர் கோவிலுக்குச் சென்றனர்.
விநாயகர் சந்நிதியில் நின்றதும் செண்பகவடிவால் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கைகளைக் கூப்பி, கண்ணீர் மல்க மனமுருகி வேண்டத் தொடங்கினார்."அப்பனே விநாயகா... உன்னோட தம்பிக்குத்தானே நாங்க மாலை போட்டுட்டு வந்தோம். அதுக்குள்ள இப்படி அறுந்து விழுந்துடுச்சே! நாங்க செஞ்ச ஏதாவது தப்புக்கு இது தண்டனையா, இல்ல இனிமேல் நடக்கப்போற ஏதாவது ஒரு கெட்டதுக்கு இது முன்னறிவிப்பான்னு எங்களுக்குத் தெரியலையேப்பா. என்ன நடந்தாலும் சரி, நீயும் உன் தம்பியும் தான் எங்களைக் காப்பாத்தணும். எனக்கோ, என் குடும்பத்துக்கோ, என் பிள்ளைகளுக்கோ எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது சாமி" என்று தன் முழு பாரத்தையும் அந்தப் பிள்ளையார் பாதத்தில் இறக்கி வைத்துவிட்டு மாலையைச் சாற்றினார்.
ஒருவழியாக அந்தத் தவிப்புடனே அனைவரும் மயில்வனம் கிராமத்திற்குத் திரும்பினார்கள். அதிகாலையிலேயே கிளம்பியதாலும், தைப்பூச நேரம் என்பதால் கோவிலில் இருந்த பெருங்கூட்டத்தாலும் அனைவருக்கும் உடல் சோர்வு அதிகமாகவே இருந்தது. அவர்கள் வீட்டை வந்தடையும்போது மணி பகல் பன்னிரண்டைத் தொட்டிருந்தது. வீட்டிற்கு வந்தவுடனே செண்பகவடிவு நேராகச் சமையல் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டார். அலைச்சலால் களைத்துப் போயிருந்த ராஜரத்தினம் சற்று ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.
தெய்வானை ஜர்னலிசம் படித்திருந்தாலும் இதுவரை ஒரு நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை. அவள் இணையத்தில் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வந்தாள். அவளுடைய அந்தப் சேனலை சுமார் ஐந்தாயிரம் பேர் பின்தொடர்ந்து வந்தார்கள். இன்று காலையில் இருந்து நடந்த அத்தனை சம்பவங்களையும், அந்த பித்தன் சொன்ன வார்த்தைகளையும், அறுந்த மாலையையும் வைத்துப் புதிதாக ஒரு காணொளி பதிவு செய்யலாம் என்று முடிவு செய்தாள். அதற்கான வேலைகளில் அவள் மும்முரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
அதே நேரத்தில், திருப்பரங்குன்றத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ராஜவள்ளிபுரம் என்ற கிராமத்தில் வேறு ஒரு சம்பவம் நடந்து கொண்டிருந்தது. அந்த ஊரின் நாட்டாமை கந்தையா. ஊர் மக்கள் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் ஒரு நபர். ஊருக்கு அவர்தான் பெரிய மனிதர்.
அன்று அவரைப் பார்ப்பதற்காக ஊர் மக்கள் சிலர் கூட்டமாக வந்திருந்தார்கள்."ஐயா, இந்த வருஷம் நம்ம ஊர்ல இருக்கிற சின்ன முருகன் கோவில்ல தைப்பூச விழாவை ரொம்ப சிறப்பா கொண்டாடணும். அதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணலாமா?" என்று மிகுந்த மரியாதையுடன் கேட்டார்கள்.
அதைக் கேட்ட கந்தையா முகம் மலர்ந்து,"தாராளமா பண்ணலாம். முருகனுக்குச் செய்யாம நாம வேற யாருக்குச் செய்யப் போறோம்? இதுல என் பங்கா, விழாவோட பாதிச் செலவை நான் ஏத்துக்கிறேன். மீதிய ஊர் மக்கள் பார்த்துக்கட்டும். இந்த வருஷம் தைப்பூசம் நம்ம ஊர்ல ரொம்ப பிரமாதமா நடக்கணும்" என்று பெருந்தன்மையுடன் சொன்னார்.
எந்த உதவி கேட்டாலும் தட்டாமல் செய்யும் அவருடைய அந்த நல்ல மனதை மக்கள் அனைவரும் வியந்து பாராட்டிக் கொண்டே சென்றார்கள்.
அடுத்த நாள் விடியற்காலை ஆறு மணி இருக்கும். கந்தையாவின் மனைவி காந்தாரிக்கு எப்போதுமே அதிகாலையில் கண் விழிக்கும் வழக்கம் உண்டு. ஐந்தரை மணிக்கெல்லாம் படுக்கையை விட்டு எழுந்தவர், தன் அருகில் கணவரைக் காணாததால் சற்றுத் திகைத்தார். சொல்லாமல் கொள்ளாமல் அதிகாலையிலேயே எங்கே சென்றிருப்பார் என்று நினைத்தபடியே வீட்டின் வாசலுக்குச் சென்று தண்ணீர் தெளித்து கோலம் போட்டார்.
பின்னர், கொட்டகையில் கட்டப்பட்டிருக்கும் மாடுகளுக்குத் தண்ணீர் வைக்கலாம் என்று வீட்டின் பின்பக்கத்திற்குச் சென்றார்.
அங்கே அவர் கண்ட காட்சி அவர் நெஞ்சை ஒருகணம் நிறுத்தியது.
கந்தையா தரையில் குப்புற விழுந்து கிடந்தார். பதறிப்போன காந்தாரி,"என்னங்க... என்னங்க..." என்று அலறியபடியே ஓடிச் சென்று அவரைத் தட்டி எழுப்பினார்.
ஆனால் அவரிடம் எந்த அசைவும் இல்லை.
அப்படியே அவரைப் புரட்டிப் பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
கந்தையாவின் இடது கை மணிக்கட்டில் நரம்புகள் கொடூரமாக அறுக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து வெளியேறிய ரத்தம் தரையெங்கும் வழிந்து உறைந்து போயிருந்தது.
ஊரே மதித்துப் போற்றும் அந்த மனிதன் உயிரற்றுச் சடலமாகக் கிடந்தார்.
கருத்துகள்
கருத்து இட உள்நுழையவும்கருத்துகள் இன்னும் இல்லை.