← ஏழாம் படை வீடு
அத்தியாயம் 2

அத்தியாயம் 2

1,295 சொற்கள் · முடிந்த கதை

நேற்று வரை அமைதியின் உருவமாகத் திகழ்ந்த ராஜவள்ளிபுரம் கிராமம், இன்று காலை எட்டு மணிக்கு முற்றிலும் வேறொரு காட்சியாக மாறியிருந்தது. வழக்கமாக அந்த நேரத்தில் பறவைகளின் கீச்சும், வீட்டு வாசலில் தண்ணீர் தெளிக்கும் சத்தமும் மட்டுமே கேட்கும் அந்தச் சிறிய கிராமம், இன்று திடீரென ஒரு பெரிய சம்பவத்தின் மையமாக மாறியிருந்தது.

கிராமத்தின் முக்கிய வீதிகளில் காவல் துறையின் ஜீப்புகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. சில வாகனங்களின் நீல விளக்குகள் இன்னும் மங்கலாக மினுங்கிக் கொண்டிருந்தன. அந்த காட்சி அந்த ஊருக்கே புதிதாக இருந்தது. மக்கள் குழுக்களாக வீதியின் இருபுறமும் திரண்டு நின்று கொண்டிருந்தார்கள்.

அந்த கூட்டம் எல்லாம் ஒரே இடத்தை நோக்கி திரண்டிருந்தது — ஊரின் பெரிய மனிதரான கந்தையாவின் வீடு.

அந்த வீட்டைச் சுற்றி காவல் துறையினர் மஞ்சள் நிறக் கயிற்றைக் கட்டி ஒரு எல்லையை அமைத்திருந்தனர். அந்தக் கயிற்றுக்குள் யாரையும் அனுமதிக்காமல் காவலர்கள் கூட்டத்தைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும் மக்கள் அந்த எல்லைக்குள் என்ன நடக்கிறது என்று அறிய ஆர்வமாக முனைந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கூடியிருந்த மக்களின் முகங்களில் அதிர்ச்சியும் வேதனையும் தெளிவாகத் தெரிந்தன.

“நம்ம ஊர்ப் பெரிய மனுஷனுக்கு இப்படி ஒரு சாவா?” என்று ஒருவன் அதிர்ச்சியுடன் சொன்னான்.

“எந்தக் கெடுதலும் நினைக்காத மனுஷன்… எறும்புக்குக் கூட தீங்கு செய்யாதவர்… அவருக்கு இப்படி ஒரு மரணம் வந்துருச்சே!” என்று மற்றொருவர் கண்ணீர் துடைத்துக் கொண்டே கூறினான்.

சில பெண்கள் வீட்டு வாசல் அருகே நின்று கொண்டு அழுதுகொண்டே இருந்தார்கள்.“ஐயோ… கந்தையா ஐயா… இந்த மாதிரி போயிட்டீங்களே!” என்று அவர்கள் விசும்பிக் கொண்டிருந்தார்கள்.

அந்த வீட்டின் உள்ளே மட்டும் ஒரு பதற்றமான அமைதி நிலவியது.

அந்த நேரத்தில் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒரு காவல் அதிகாரி உள்ளே நுழைந்தார். அவர் காவல் ஆய்வாளர் கார்த்திகேயன். அவருடைய நடை உறுதியானது. முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல், சூழ்நிலையை கவனமாக ஆராயும் ஒரு பார்வை மட்டும் இருந்தது.

ஏற்கனவே சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து விட்டிருந்தார்கள். அவர்கள் தங்களது கருவிகளைத் திறந்து வைத்து வேலைகளைத் தொடங்கியிருந்தனர்.

ஒருவர் கேமராவை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்தை பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தார். தரையில் கிடந்த உடலை முதலில் தொலைவிலிருந்து படம் எடுத்தார். அதன் பிறகு மெதுவாக அருகே வந்து, உடலின் நிலை, காயம் ஏற்பட்ட பகுதி, சுற்றியிருந்த ரத்தக் கறைகள் என அனைத்தையும் தனித்தனியாகப் புகைப்படமாகப் பதிவு செய்தார்.

மற்றொரு நிபுணர் கையுறைகள் அணிந்து கொண்டு தரையில் இருந்த ரத்தத்தின் தடயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு சிறிய கருவியால் ரத்தத்தின் அருகே இருந்த மணலை மெதுவாக எடுத்துப் பார்த்தார். அருகில் இருந்த அதிகாரியிடம் ஏதோ மெதுவாகக் கூறி குறிப்பெடுத்தார்.

மூன்றாவது நிபுணர் உடலின் அருகே குனிந்து கந்தையாவின் இடது கை மணிக்கட்டைப் பகுதியை கவனமாக ஆராய்ந்தார்.

அந்த காட்சி மிகவும் கொடூரமாக இருந்தது.

கந்தையாவின் இடது கை மணிக்கட்டில் ஆழமான வெட்டுக் காயம் இருந்தது. அந்த வெட்டின் ஆழம் நரம்புகள் துண்டிக்கப்படும் அளவுக்கு இருந்தது. அந்த இடத்தில் இருந்து வெளியேறிய ரத்தம் தரையில் பெரிதாகப் பரவி, சில இடங்களில் உறைந்து கருமையாக மாறியிருந்தது.

அந்த காட்சியை சில நொடிகள் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் மெதுவாக முன்னே வந்தார்.

அவர் உடலின் அருகே நின்று, அந்த வெட்டுக் காயத்தை உற்று நோக்கினார்.

அப்போது அருகில் நின்றிருந்த ஒரு காவல் அதிகாரி மெதுவாகச் சொன்னார்.

“ஐயா… இந்த வெட்டைப் பாருங்க. இவ்வளவு ஆழமா தன் கையைத் தானே அறுத்துக்க முடியாது. இது தற்கொலை மாதிரி தெரியல. யாரோ வன்மத்தோட வெட்டிருக்காங்க.”

கார்த்திகேயன் அமைதியாக அந்த வார்த்தைகளை கேட்டார். பதில் சொல்லாமல் அவர் தலையை மட்டும் மெதுவாக அசைத்தார்.

அவரது பார்வை உடலிலிருந்து மெதுவாக தரையை நோக்கி நகர்ந்தது.

அப்போது தரையில் சிதறிக் கிடந்த சில சிறிய துளசி மணிகள் அவரது கவனத்திற்குப் பட்டது.

தடயவியல் நிபுணர் ஒருவர் அதை கையில் எடுத்துப் பார்த்தார்.

“இது துளசி மாலை மணிகள் போல இருக்கே…” என்று அவர் மெதுவாகச் சொன்னார்.

அந்த வார்த்தை கார்த்திகேயனின் கவனத்தை முழுவதும் அந்த இடத்திற்குக் கொண்டு வந்தது.

கந்தையா எப்போதும் கழுத்தில் அணிந்து கொள்வது அந்த துளசி மாலை என்பதைக் கிராமத்திலிருந்த பலரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இப்போது அந்த மாலை கழுத்தில் இல்லை.

அதற்குப் பதிலாக அந்த மாலையின் மணிகள் தரையெங்கும் சிதறிக் கிடந்தன.

கார்த்திகேயன் இன்னும் சில நொடிகள் அந்த இடத்தை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் மெதுவாக எழுந்து, அங்கே நின்றிருந்த காவலர்களிடம்,“பிணத்தை post-mortemக்கு தயாராக்குங்க. ஆனா அதுக்கு முன்னாடி இந்த இடத்தை முழுசாக பதிவு பண்ணணும். எந்த தடயமும் miss ஆகக்கூடாது,” என்று கூறினார்.

அவரது குரலில் இருந்த உறுதியைக் கேட்டதும் தடயவியல் நிபுணர்கள் தங்கள் வேலையை இன்னும் கவனமாகத் தொடங்கினர்.

ஒருவர் கந்தையாவின் உடலின் அருகில் இருந்த ரத்தக் கறைகளை அளவுகோலால் அளந்து குறிப்பெடுத்தார். இன்னொருவர் அந்த இடத்தைச் சுற்றி இருந்த காலடித் தடங்களை கவனமாகப் பார்த்தார். அந்த தடயங்கள் புகைப்படமாகப் பதிவு செய்யப்பட்டது.

அதற்கிடையில், வீட்டின் வாசல் அருகே அமர்ந்து கொண்டிருந்த கந்தையாவின் மனைவி காந்தாரி தலையைப் பிடித்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.

கார்த்திகேயன் மெதுவாக அவளருகே சென்றார்.

“அம்மா… கொஞ்சம் மனசைத் தேத்திக்கோங்க,” என்று மெதுவாகச் சொன்னார்.

அவள் கண்ணீர் மல்க அவரை நோக்கிப் பார்த்தாள்.

“நேத்து ராத்திரி என்ன நடந்தது? அவர் எப்போ தூங்கப் போனார்? யாராவது வீட்டுக்கு வந்தாங்களா?” என்று கார்த்திகேயன் மெதுவாகக் கேட்டார்.

அழுதபடியே காந்தாரி பேசத் தொடங்கினாள்.

“நேத்து ராத்திரி எதுவுமே இல்ல சாமி… எல்லாமே வழக்கம்போலத்தான். கோவில் திருவிழாவுக்காக ஊர் மக்கள் வந்திருந்தாங்க. அவங்களோட பேசிக்கிட்டு சிரிச்சுக்கிட்டே இருந்தாரு. ‘இந்த வருஷம் திருவிழா நன்றாக நடக்கணும்’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு.”

அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

“அதுக்கப்புறம் சாப்பாடு சாப்பிட்டு ராத்திரி தூங்கப் போனோம். அதிகாலையில நான் எழுந்தப்போ அவரை படுக்கையில் காணோம். வெளியே போயிருப்பார்னு நினைச்சேன். பின்னாடி போய்ப் பார்த்தப்போ…” என்று சொல்லிக்கொண்டே அவள் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறினாள்.

அவளது அழுகையைப் பார்த்து அங்கே நின்றிருந்த சில பெண்களும் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.

கார்த்திகேயன் அமைதியாக அவளது வார்த்தைகளை கேட்டார்.

“அவருக்கு யாராவது எதிரிகள் இருக்காங்களா?” என்று கேட்டார்.

அந்த கேள்வியை கேட்டதும் காந்தாரி உடனே தலையசைத்தாள்.

“எதிரியா? அவருக்கா? எறும்புக்குக் கூட தீங்கு நினைக்க மாட்டாரு சாமி. ஊர்ல யாருக்காவது பிரச்சனைன்னா முதல் ஆளா போய் சமாதானம் பேசுறவர். எதுக்காக அவரை யாராவது கொல்லணும்?”

அவள் பேசிக்கொண்டிருக்கும்போது அருகில் நின்றிருந்த ஊர் மக்கள் சிலரும் தலையசைத்தனர்.

“அம்மா சொல்றது சரிதான் ஐயா,” என்று ஒரு வயதானவர் சொன்னார்.“கந்தையா மாதிரி மனுஷன் இங்க இன்னொருத்தர் கிடையாது. யாருக்காவது உதவி வேண்டும்னா உடனே காசு எடுத்துக் கொடுப்பார்.”

மற்றொருவர் சொன்னார்:

“நேத்துதான் கோவில் திருவிழாவுக்கு பாதி செலவு நான் பார்த்துக்கறேன் னு சொல்லி மகிழ்ச்சியா இருந்தாரு. அந்த மாதிரி மனுஷனுக்கு இப்படி நடக்குது நம்பவே முடியல ஐயா.”

கார்த்திகேயன் அந்த கூட்டத்தை கவனமாகப் பார்த்தார்.

“நேத்து ராத்திரி இங்கே யாரெல்லாம் வந்திருந்தாங்க?” என்று அவர் மீண்டும் கேட்டார்.

ஒரு இளைஞன் முன்னே வந்து,“ஊர் பெரியவர்கள் சிலர் இருந்தாங்க ஐயா. கோவில் விஷயமா பேசினாங்க. அதுக்கப்புறம் எல்லாரும் கிளம்பிட்டாங்க,” என்றான்.

“அவரு யாராவது போன் பேசினாரா? சண்டை போட்டாரா?” என்று கார்த்திகேயன் கேட்டார்.

“இல்ல ஐயா… எதுவுமே இல்ல,” என்று அவன் பதில் சொன்னான்.

அந்த பதில்களை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகேயன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தார்.

அவரது பார்வை மீண்டும் அந்த சிதறிக் கிடந்த மாலை மணிகளின் மீது விழுந்தது.

ஒரு மனிதனை கொலை செய்ய வேண்டிய அளவுக்கு கோபம் யாருக்காவது இருக்கலாம்.

ஆனால் அந்த மாலையை மட்டும் இப்படி சிதறடிக்க வேண்டிய அளவுக்கு வன்மம் காட்டியதற்குப் பின்னால் வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

அவரது உள்ளுணர்வு மெதுவாகச் சொன்னது —

இந்த மரணம் சாதாரண கொலை அல்ல.

இதன் பின்னால் இன்னும் தெரியாத ஒரு பெரிய மர்மம் இருக்கிறது.

அந்த நேரத்தில் தடயவியல் நிபுணர்கள் தரையில் சிதறிக் கிடந்த மாலை மணிகளை ஒன்றொன்றாக சேகரித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அவற்றை சிறிய பைகளில் வைத்து பதிவு செய்து கொண்டார்கள். அந்த மணிகள் சாதாரண மாலையின் மணிகள் அல்ல என்பது அவர்கள் கண்ணில் பட்டது. துளசி மாலையின் மணிகள் என்பதால் அவை கொஞ்சம் கனமாகவும், மெருகாகவும் இருந்தன.

கார்த்திகேயன் மெதுவாக அந்த இடத்தை சுற்றி நடந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரது பார்வை ஒவ்வொரு மூலையையும் கவனமாக அலசியது.

அப்போது உடலிலிருந்து சற்றுத் தள்ளி, தரையில் மண்ணுக்குள் பாதியாக புதைந்திருந்த ஒரு சிறிய பொருள் அவரது கவனத்திற்குப் பட்டது.

“அதை கொஞ்சம் பாருங்க,” என்று அவர் அருகில் இருந்த தடயவியல் நிபுணரிடம் சொன்னார்.

அந்த நிபுணர் குனிந்து மெதுவாக அந்த பொருளை எடுத்தார். மண்ணை துடைத்தபோது அது தெளிவாகத் தெரிந்தது.

அது முருகர் டாலர்.

முருகன் திருவுருவம் பொறிக்கப்பட்ட அந்த டாலர், ஒரு காலத்தில் மாலையின் நடுவில் இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது.

கார்த்திகேயன் அதை கையில் எடுத்தார். அவர் அதை சில நொடிகள் கவனமாகப் பார்த்தார். டாலரின் விளிம்புகள் கொஞ்சம் கீறப்பட்டிருந்தது. அது பலமாக இழுக்கப்பட்டு அறுந்தது போல இருந்தது.

“இந்த மாலை கந்தையா எப்போதும் கழுத்தில் அணிவாராம் இல்லையா?” என்று அவர் அருகில் நின்றிருந்த காவலரிடம் கேட்டார்.

“ஆமாம் ஐயா,” என்று அந்த காவலர் சொன்னான்.“ஊர்ல எல்லாருக்கும் தெரியும். அந்த மாலை அவருக்கு ரொம்ப முக்கியம்.”

கார்த்திகேயன் அந்த டாலரை இன்னும் சில நொடிகள் தனது உள்ளங்கையில் வைத்தபடி பார்த்தார்.

ஒரு மனிதனை கொலை செய்வது வேறு விஷயம்.ஆனால் அவன் கழுத்தில் இருந்த பக்தியின் அடையாளமான மாலையையே இப்படி சிதறடிக்க வேண்டிய அளவுக்கு கோபம் காட்டியிருக்கிறான் யாரோ.

அது சாதாரண கோபம் இல்லை.

அந்த நேரத்தில் திடீரென்று ஒரு சேவல் அந்த இடத்திற்கு அருகே வந்து நின்றது. அது வீட்டில் வளர்க்கப்பட்ட சேவல்.

யாரும் கவனிக்கும்முன்னே அந்த சேவல் கார்த்திகேயனின் கையில் இருந்த முருகர் டாலரை ஒரு கொத்துக் கொத்தி தட்டியது.

டாலர் அவரது கையிலிருந்து கீழே விழுந்தது.

அந்த சேவல் உடனே அதை அலகால் பிடித்துக் கொண்டு ஓடிவிட்டது.

“ஏய்! பிடிங்க!” என்று அருகில் இருந்த காவலர்கள் கூச்சலிட்டார்கள்.

அவர்கள் அந்த சேவலைத் துரத்திக் கொண்டு ஓடினர். சேவல் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு குறுகிய முடுக்குக்குள் புகுந்தது.

“அதுக்குள்ள போச்சு!” என்று ஒருவன் சொன்னான்.

போலீஸ்காரர்கள் அந்த இடத்துக்குள் பார்த்தார்கள். ஆனால் அந்த சேவல் அங்கே காணப்படவில்லை. அது அப்படியே கண்ணில் மறைந்தது போல இருந்தது.

“இப்போதான் இங்க ஓடிச்சு வந்துச்சே… எங்க போச்சு?” என்று ஒருவன் குழப்பமாகச் சொன்னான்.

அவர்கள் அந்த இடத்தை முழுவதும் தேடத் தொடங்கினர்.

அந்த நேரத்தில் வாசல் அருகே நின்றிருந்த ஒரு காவலரின் மொபைல் போன் திடீரென்று ஒலித்தது.

அந்த ரிங்க்டோனில் ஒரு பக்திப் பாடல் ஒலித்தது.

“சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச் சேர்ந்து வணங்கிடுவோம்,சிக்கலிலாயினும் செந்திலிலாயினும் சென்று பணிந்திடுவோம்.…”

அந்த இரண்டு வரிகள் அந்த அமைதியான இடத்தில் எதிரொலித்தது.

கார்த்திகேயன் மட்டும் அந்த முடுக்கை நோக்கி நின்றபடி யோசித்துக் கொண்டிருந்தார்.

அந்த சேவல் மறைந்த இடத்தையும்…அந்த முருகர் டாலரையும்…அவர் மனதில் ஏதோ ஒரு சந்தேகம் மெதுவாக உருவாகிக் கொண்டிருந்தது.

அந்த முடுக்கைச் சுற்றி இன்னும் சில போலீஸ்காரர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த சேவல் எங்கேயோ மறைந்தது போலத் தெரியவில்லை.

அப்போது அருகில் நின்றிருந்த ஒரு காவலர் விரைவாக கார்த்திகேயனிடம் வந்து நின்றான்.

“சார்…” என்று தயக்கத்துடன் தொடங்கினான்.

“என்ன?” என்று கார்த்திகேயன் திரும்பிப் பார்த்தார்.

“சார், நீங்க கையில வைத்திருந்த முருகர் டாலரை அந்த சேவல் கொத்திட்டு போய்டுச்சு. இப்போ அந்த சேவலே காணோம். அதுக்குள்ள இப்போ இந்த போன்ல கேட்ட சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச் சேர்ந்து வணங்கிடுவோம் ரிங்க்டோனும் முருகரப் பற்றிய பாடல்… கந்தையாவும் பெரிய முருக பக்தர்… எல்லாமே முருகருடன் சம்பந்தப்பட்ட மாதிரி இருக்கு சார். இதில் ஏதாவது பெரிய மர்மம் இருக்குமோ சார்?” என்று அவன் மெதுவாகக் கேட்டான்.

கார்த்திகேயன் அவனை சில நொடிகள் அமைதியாகப் பார்த்தார்.

பின்னர் சற்றுக் கடுப்புடன்,“யோவ் … சும்மா இரு. ஏதாவது போட்டு உளறிக்கிட்டே இருக்காத. உன் வேலையைப் பார்,” என்று கூறிவிட்டு திரும்பிப் நடந்தார்.

ஆனால் அவர் நடந்து செல்லும்போது, அந்த வார்த்தைகள் அவரது மனதிலும் ஒரு நொடிக்கு ஒலித்தன.

அங்கே நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையில் சாதாரணமா…அல்லது இன்னும் புரியாத ஏதோ ஒன்றின் தொடக்கமா…

இந்த அத்தியாயத்தைப் புகார் அளிக்க

மதிப்பீடு

முதல் மதிப்பீட்டை வழங்குங்கள்

மதிப்பீடு வழங்க உள்நுழையவும்

கருத்துகள்

கருத்து இட உள்நுழையவும்

கருத்துகள் இன்னும் இல்லை.