← ஏழாம் படை வீடு
அத்தியாயம் 3

அத்தியாயம் 3

1,381 சொற்கள் · முடிந்த கதை

பகல் பன்னிரண்டு மணி. மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகே இருந்த அந்த நடுத்தரமான தங்கும் விடுதியின் அறையில், அசதியால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் தெய்வானை.

திடீரென அவளது அலைபேசி தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கியது. தூக்கக் கலக்கத்தோடு எழுந்து திரையைப் பார்த்தாள். 'அம்மா' என்ற பெயரைக் கண்டதும் மெல்லத் தொண்டையைக் கனைத்துக்கொண்டு அழைப்பை ஏற்றாள்.

"சொல்லுமா..."

"என்னடி செய்ற? மீனாட்சி அம்மன் கோவில்ல வச்சு சில வீடியோக்கள் எடுக்கணும், நேத்து உன் தோழி வைதேகி போன் பண்ணான்னு சொல்லிட்டு அரக்கப்பறக்கக் கிளம்பிப் போனியே! என்னாச்சு, வேலை எல்லாம் முடிஞ்சதா? இன்னைக்கு ராத்திரி கிளம்பி வர்றியா?" என்று எதிர்முனையில் செண்பகவடிவு சற்றுப் பதற்றமாகக் கேட்டார்.

"ஆமாம்மா... ராத்திரி கிளம்பி வந்துருவேன். ஆனா இங்க இன்னும் எந்த வேலையும் ஆரம்பிக்கவே இல்ல. அவ காலையில ஒன்பது மணிக்கே வந்துருவேன்னு நேத்து சொல்லியிருந்தா. ஆனா, இதுவரைக்கும் வரவே இல்லை. எனக்கு நேத்து வந்த அலைச்சல்ல உடம்பு காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருந்துச்சா... அதான் அசந்து தூங்கிட்டேன். இரு, நான் அவளுக்குக் கூப்பிட்டுப் பேசிட்டு என்ன ஏதுன்னு உனக்குச் சொல்றேன்," என்று சோர்வான குரலில் பதிலளித்தாள் தெய்வானை.

"சரிடி, பார்த்துப் பத்திரமா இருந்துக்கோ. ராத்திரி கிளம்பி வர்றப்போ முன்கூட்டியே சொல்லு. நீ பழநி பஸ் ஸ்டாண்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே அப்பாவை அங்கே வந்து உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்றேன்," என்று அக்கறையுடன் கூறிவிட்டு அலைபேசியைத் துண்டித்தார் தாய்.

அழைப்பு துண்டிக்கப்பட்ட மறுகணம், தெய்வானையின் முகத்தில் கோபம் பற்றிக்கொண்டது. 'இவளை நம்பி இவ்வளவு தூரம் வந்தோமே' என்ற எரிச்சலோடு வைதேகியின் எண்ணைத் தொடர்புகொண்டாள்.

எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், தெய்வானை வெடித்தாள். "என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? உன்னை நம்பித்தானேடி நான் மதுரைக்கு வந்தேன். நேத்து ராத்திரிக்கு மட்டும் இங்க ரூம் போட்டுத் தங்கிட்டு, காலையில வந்துருவேன்னு சொன்ன... மணி பன்னிரண்டு ஆகுது, ஆளையும் காணோம், ஒரு தகவலும் இல்லை. நான் இங்க தனியா வந்து மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கு!" என்று சரமாரியாகப் பொரிந்து தள்ளினாள்.

எதிர்முனையில் வைதேகியின் குரல் மிகவும் உடைந்துபோய், ஒருவித நடுக்கத்தோடு ஒலித்தது.

"கோவிச்சுக்காத தெய்வானை... இங்க எங்க ஊர்ல ஒரு பெரிய கலவரமே நடந்துட்டு இருக்குடி. எங்க ஊர்த் தலைவரை நேத்து ராத்திரி யாரோ கையை வெட்டிக் கொடூரமா கொன்னுட்டாங்க. ஊருக்குள்ள போலீசும் கூட்டமுமா ஒரே பதற்றமா இருக்கு. என்னால வீட்டை விட்டு வெளியவே வர முடியாத நிலைமை. உன்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு தெரியாமத்தான் தவிச்சிட்டு இருந்தேன்."

இதைக் கேட்டதும் தெய்வானையின் கோபம் சட்டெனக் குறைந்து, அதிர்ச்சியானது. அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"நான் இன்னைக்கு எப்படியும் வரலாம்னுதான் பார்த்தேன், ஆனா முடியல. நீ ஒன்னு செய்... இன்னைக்கு ராத்திரி உனக்கு ஊருக்குத் திரும்ப ரயில் டிக்கெட் இருக்குதானே? அதுவரைக்கும் அங்கேயே தனியா இருக்க வேண்டாம். நீ உடனே இங்க வந்துரு. ஒரு பஸ்ஸைப் பிடிச்சு திருப்பரங்குன்றம் வந்து, அங்கிருந்து ஆட்டோ பிடிச்சு ராஜவள்ளிபுரம் வந்துரு. நம்ம வீட்லயே இருந்துட்டு, சாயந்திரமா நானோ எங்க அப்பாவோ உன்னைப் பத்திரமா கொண்டுபோய் ரயில் ஏத்தி விடுறோம். ப்ளீஸ் டி... நீ இங்க வா..." என்று வைதேகி கிட்டத்தட்டக் கெஞ்சும் குரலில் கேட்டாள்.

வைதேகி அவ்வளவு வற்புறுத்திக் கேட்டதால், தெய்வானையால் மறுக்க முடியவில்லை. ஊரில் நடந்த கொலையைக் கேள்விப்பட்டதும் தோழியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்குள் எழுந்தது.

"சரிடி... நான் இப்போதே கிளம்பி வர்றேன்," என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்தாள் தெய்வானை. மெல்லக் கட்டிலை விட்டு எழுந்தவள், ராஜவள்ளிபுரத்திற்குச் செல்வதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கினாள்.

வைதேகியிடம் பேசி முடித்து தொலைபேசியை வைத்த பிறகு, தெய்வானை ஒரு பெருமூச்சு விட்டாள். இன்னும் கொஞ்ச நேரம் அந்த அறையில் இருந்தால்கூட பைத்தியம் பிடித்துவிடும் போல் தோன்றியது. அவசரமாகத் தன் உடமைகளை எடுத்து வைத்துக்கொண்டு, விடுதி அறையைக் காலி செய்தாள். மதுரை ஆரப்பாளையத்திலிருந்து மாநகரப் பேருந்தில் ஏறி, திருப்பரங்குன்றத்தை நோக்கிப் பயணித்தாள்.

பேருந்து திருப்பரங்குன்றத்தை நெருங்கும்போது, தூரத்திலிருந்தே அந்தப் பழமையான குடைவரைக் கோயிலின் கோபுரம் மிகச் சிறப்பாகத் தெரிந்தது. முருகப்பெருமானின் முதற்படை வீடு. அதைப் பார்த்ததுமே உள்ளே சென்று வழிபட வேண்டும் என்ற எண்ணம் தெய்வானைக்குள் ஆழமாக எழுந்தது. ஆனால், நேரம் ஒன்றரையைத் தாண்டியிருந்தது. இரவில் மதுரையிலிருந்து ஒன்பதரை மணிக்கு அவளுக்குத் திரும்பும் ரயில் இருந்தது. இப்போது ராஜவள்ளிபுரத்திற்குச் செல்வதே சரியாக இருக்கும் என்று மனதை மாற்றிக்கொண்டு, பேருந்து நிறுத்தத்தில் இறங்கினாள். அங்கிருந்து ராஜவள்ளிபுரத்திற்கு ஒரு ஆட்டோ பிடிப்பதற்காகச் சற்றுத் தள்ளி நடந்தாள்.

அப்போது, சற்றுத் தொலைவில் ஒரு சிறுமி ஓடி வருவதை தெய்வானை கவனித்தாள். வேகம் தாளாமல் அந்தச் சிறுமி திடீரென கால் இடறி கீழே விழப் போனாள். அவளது முகம் தரையில் மோதவிருந்த அந்த இக்கட்டான கணத்தில், சற்றும் தாமதிக்காமல் தெய்வானை பாய்ந்து சென்று அவளைத் தாங்கிப் பிடித்தாள். கீழே விழாமல் சிறுமி தப்பினாலும், அவளது கையில் இருந்த ஒரு சிறிய வேல், தெய்வானையின் கையில் அழுத்தமாகப் பட்டு லேசான வலியைக் கொடுத்தது.

அந்தச் சிறுமி பயத்தில் தெய்வானையின் சேலையை இருக்கமாகப் பிடித்துக்கொண்டாள். தெய்வானையும் அவளை ஆதரவாகத் தழுவிக்கொண்டாள். அடுத்த சில நொடிகளில், பின்னால் ஓடிவந்த அந்தச் சிறுமியின் பெற்றோர் பதற்றத்துடன் நெருங்கினர்.

"ரொம்ப நன்றிம்மா... நல்லவேளை நீங்க பிடிச்சீங்க, இல்லைன்னா கொழந்தைக்குப் பெரிய அடி பட்டிருக்கும்," என்று தழுதழுத்த குரலில் கூறியபடி, அந்தச் சிறுமியை வாங்கிக்கொண்டனர்.

"அதே சமயம், சிறுமியின் கையில் இருந்த அந்தச் சிறிய வேலை தெய்வானையிடம் கொடுத்தாள்.'பாப்பா தர்றாமா வாங்கிக்கோம்மா' என்று அவளது பெற்றோரும் புன்னகையுடன் சொன்னார்கள்."

அதை வாங்கிக் கொண்ட தெய்வானை, அது தன் கையில் குத்தியதை ஒரு தடையாகவோ அல்லது கோயிலுக்குள் செல்ல முடியாததன் அறிகுறியாகவோ முதலில் நினைத்தாள். ஆனால், நேரம் இல்லாததால் அந்த வேலைப் பத்திரமாக வைத்துக்கொண்டு ஆட்டோவைத் தேடி நடந்தாள்.

ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் சென்று, "அண்ணா... ராஜவள்ளிபுரம் போகணும், எவ்ளோ ஆகும்?" என்று கேட்டாள்.

"ராஜவள்ளிபுரமா? ஏறுங்கம்மா... நூத்தி ஐம்பது ரூவா ஆகும்," என்று அவர் சொல்ல, சம்மதித்து வண்டியில் ஏறினாள்.

அவள் ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும், வண்டியில் அவளுக்குப் பக்கத்தில் இருந்த முதிய தம்பதியினர் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருப்பதை தெய்வானை கவனித்தாள்.

அதில் அந்த மூதாட்டி தன் கணவரிடம் சலிப்போடு சொல்லிக்கொண்டிருந்தார். "நம்மளும் சென்னையில இருந்து எத்தனையோ தடவை இந்தத் திருப்பரங்குன்றத்துக்கு வரணும்னு நினைச்சோம்... ஆனா ஒரு தடவ கூட முடியல. இப்பத்தான் வர முடிஞ்சிருக்கு. ஆனா பாருங்களேன்... கோயிலுக்குள்ள போயும் சாமியைச் சரியா தரிசனம் பண்ண முடியல... ஏதோ ஒரு குறையாவே இருக்கு," என்றார்.

அப்போது அந்த முதியவர் மிக அமைதியான குரலில் பதிலளித்தார். "அம்மாடி... நம்ம நினைச்சா மட்டும் போயிட முடியாது. அவரு அழைக்கணும்... அவரு கூப்பிட்டால்தான் நம்மால போக முடியும்," என்றார் ஒருவிதத் தத்துவார்த்தமான தொனியில்.

அந்த வார்த்தைகள் தெய்வானையின் காதுகளில் ஒலித்தபோது, அவளுக்குள் ஏதோ ஒன்று ஆழமாக உரைத்தது. 'அவன் அழைக்க வேண்டும்' என்ற அந்த முதியவரின் வார்த்தைகள், ஏதோ முருகனே தன்னிடம் சொல்வது போல அவளுக்குத் தோன்றியது. தான் கோயிலுக்குப் போக முடியாததையும், கையில் கிடைத்த இந்த வேலையும் அவள் ஒன்றுபடுத்திப் பார்த்தாள். அவளது எண்ண ஓட்டங்களை கலைப்பது போல, ஆட்டோ ஓட்டுநர் வண்டியை இயக்கத் தயாரானார்.

"போலாமாம்மா?" என்ற ஓட்டுநரின் குரலுக்கு, "போலாம் அண்ணா" என்று பதிலளித்தாள்.

போகும் வழியில் முதிய தம்பதியர்களை ஒரு உணவு கடையில் இறக்கிவிட்டு, ஆட்டோ ராஜவள்ளிபுரம் நோக்கி சென்றது.

ஆட்டோ ராஜவள்ளிபுரம் எல்லையை நெருங்கியபோது, அங்கே ஒரு பெரிய கூட்டம் நிற்பதைக் கண்டாள். எல்லையில் சில காவல்துறையினரும் நின்றுகொண்டிருந்தனர். ஊருக்குள் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது.

ஆட்டோ ஓட்டுநர் வண்டியைச் சற்று மெதுவாக்கிக் கொண்டே தெய்வானையிடம் திரும்பி, "இன்னைக்கு இந்த ஊர்ல ஒரு கொலை... ஊர்ல முக்கியஸ்தர் ஒருத்தரை யாரோ கையை வெட்டிக் கொடூரமா கொன்னுட்டாங்க," என்றார் மெல்லிய குரலில்.

தெய்வானை, "அப்படியா?" என்று மட்டும் கேட்டுக்கொண்டாள்.

"ஆமாம்மா... அவர் ரொம்பப் பெரிய மனுஷன். எனக்கும் கூட ஒன்னு ரெண்டு தடவை உதவி செஞ்சிருக்காரு. அப்படிப்பட்ட நல்லவரை யாரு இப்படிப் பண்ணாங்களோ, தெரியல," என்று அவர் சலித்துக்கொண்டார்.

ஆட்டோ ஓட்டுநர் வீட்டு விலாசம் கேட்க உடனடியாக வைதேகிக்கு அழைத்தாள். தொலைபேசியை எடுத்த வைதேகியிடம், வீட்டின் முகவரியைக் கேட்க, ஆட்டோ ஓட்டுநரே தொலைபேசியை வாங்கிக்கொண்டு வழியைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். சில நிமிடங்களில் வைதேகியின் வீட்டின் முன் ஆட்டோ நின்றது. தெய்வானை ஆட்டோவிலிருந்து இறங்கியதும், வைதேகி ஓடி வந்து அவளை வரவேற்றாள்.

அவளைப் பார்த்ததும்தான் வைதேகிக்கு நிம்மதியாக இருந்தது. மூன்று வருடங்களாகப் பழகிவரும் இருவரின் நட்பில், எந்த நேரத்திலும் உதவியாக இருப்பவள் தெய்வானை. இப்போது இவள் ஒருத்திதான் வைதேகிக்கு ஆறுதலாக வந்திருந்தாள்.

"வாடி..." என்று தெய்வானையின் கைகளைப் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றாள் வைதேகி.

நேற்றிலிருந்து ஊரில் நடந்த சம்பவங்கள், போலீஸ் விசாரணை, அந்தப் பெரிய மனிதர் கந்தையாவின் கொலை பற்றிய அனைத்து விவரங்களையும் அவர்கள் பரஸ்பரம் பேசிக்கொண்டனர். வைதேகியின் பெற்றோரும் அந்தச் சம்பவத்தின் பயத்திலிருந்து மீளாமல் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கூறினார்கள்.

"ரொம்ப நல்ல மனுஷம்மா அவரு... அவருக்குப் போய் இப்படி ஒரு கதியா!" என்று வைதேகியின் அம்மா வருத்தத்துடன் சொன்னார்.

தெய்வானைக்கு அது ஒரு சாதாரணமான செய்தியாகத் தோன்றவில்லை. ஒரு பத்திரிகையாளராக அவளுக்குள் இருந்த தேடல் அவளை உந்தியது. "எவ்வளவு பெரிய தப்பு நடந்திருக்கு... இதைப் பத்தி நாம ஏதாவது ஒரு வீடியோ எடுத்து, நம்ம யூடியூப் சேனல்ல போடலாமே?" என்று வைதேகியிடம் கேட்டாள்.

"ஐயோ! வேணாம்டி... இங்க போலீஸ் கெடுபிடி ரொம்ப அதிகமா இருக்கு. யாரையும் அந்தப் பக்கமே விட மாட்டேங்குறாங்க. நம்ம வீட்ல தெரிஞ்சா அவ்ளோதான்!" என்று வைதேகி பதறினாள்.

"ஒன்னும் ஆகாதுடி... நான் ஒரு ஜர்னலிஸ்ட். எனக்குத் தெரியும் என்ன பண்ணனும்னு. சும்மா வெளியில நின்னு ஒரு ஷாட் எடுத்துட்டு வந்துடுறேன்," என்று பிடிவாதமாகக் கூறினாள் தெய்வானை.

வைதேகியால் அவளைத் தடுக்க முடியவில்லை. சரி என்று சொல்லிவிட்டு, தெய்வானையோடு சேர்ந்து கந்தையாவின் வீட்டுப் பக்கம் சென்றாள்.

ஊரே பதற்றத்தில் இருந்தது. கந்தையாவின் வீட்டைச் சுற்றி மஞ்சள் கயிற்றால் தடுப்பு வேலி அமைத்து போலீஸ்காரர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தனர். வீட்டின் உள்ளே யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தெய்வானை அந்தத் தடுப்பிற்கு வெளியே நின்றபடியே, தன் செல்போன் கேமராவை ஆன் செய்தாள். சுற்றுமுற்றும் இருக்கும் கூட்டத்தையும், போலீஸ் பாதுகாப்பையும் பதிவு செய்தாள்.

"நான் தெய்வானை. இது ராஜவள்ளிபுரம் கிராமம். இங்கதான் நேத்து இரவு ஊர் நாட்டாமை கந்தையா, கையை வெட்டிக் கொடூரமா கொலை செய்யப்பட்டிருக்காரு. ஊரே பதற்றத்துல இருக்கு..." என்று மெல்லிய குரலில் வர்ணனையோடு ஒரு வீடியோவைப் பதிவு செய்தாள்.

வீடியோவை எடுத்து முடித்தபின், அவளது கண்கள் அந்த வீட்டின் பின்பக்கம் இருந்த இரத்தக் கறையின் மீது விழுந்தன. போலீஸ்காரர்கள் கவனிக்காத நேரத்தில், ஒரு சின்னத் தயக்கத்தோடு அந்த மஞ்சள் தடுப்பு கயிற்றைத் தாண்டி உள்ளே சில அடி தூரம் நடந்தாள்.

அவள் சற்று முன்னேறியதும், அந்த இரத்தக் கறையிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு சிறிய பொருள் மண்ணில் பாதி புதைந்து கிடப்பதை கவனித்தாள். ஏதோ தங்கம் போல் அது மின்னியது. அவளது தேடல் குணம் அவளை விடவில்லை. மெல்லக் குனிந்து அந்தப் பொருளை எடுத்தாள். 'ஓம்' பொறிக்கப்பட்ட ஒரு சிறிய டாலர். ஒரு நாணயத்தின் அளவே இருந்த அது, சுமார் கால் கிராம் தங்கம் கூட இருக்காது. ஆனால் அது அவளை ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்தது.

'இது யாருடையது? இந்தக் கொலைக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?' என்று அவளுக்குள் பல கேள்விகள் எழுந்தன. சத்தம் போடாமல் அதைத் தன் பர்ஸிற்குள் பத்திரமாக வைத்துக்கொண்டாள்.

"டேய்! யார் அங்க?" என்று ஒரு போலீஸ்காரரின் குரல் கேட்டதும், பதறிய தெய்வானை வைதேகியை இழுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து விலகிவிட்டாள்.

வீட்டிற்குத் திரும்பியதும், மாலை ஆறு மணியளவில் தான் எடுத்த வீடியோவை எடிட் செய்து, அதற்கான வாய்ஸ் ஓவர் கொடுத்து, யூடியூபில் அப்லோட் செய்தாள். அந்த வீடியோவை முடித்த சில நிமிடங்களில், அவளது அலைபேசி ஒலித்தது. அவளது அம்மா செண்பகவடிவு அழைத்திருந்தார்.

"சொல்லுமா... கிளம்பப்போறேன், ஒன்பதரைக்கு ட்ரெயின். வைதேகியோட அப்பாதான் என்னைக் கொண்டு போய் விடப்போறாரு," என்றாள் தெய்வானை.

"இல்லடி தெய்வானை... நீ ஊருக்கு வர வேண்டாம்," என்று செண்பகவடிவின் குரல் பதற்றமாகக் கேட்டது.

"ஏம்மா? என்னாச்சு?"

"இன்னைக்கு காலையில ஒரு ஜோசியரைப் பார்க்கப் போயிருந்தேன். நீ சாமிக்கு மாலை போட்டது அறுந்து விழுந்ததைப் பத்திக் கேட்டேன். உனக்கு ஏதோ பெரிய கண்டம் இருக்காம். அதைத் தாண்டி வரணும்னா, நீ கண்டிப்பா முருகனோட ஆறுபடை வீடுகளுக்கும் போய் தரிசனம் பண்ணிட்டு வரணுமாம். அதனால நீ இப்போ அங்கேயே இரு. நானும் அப்பாவும் நைட் பஸ் ஏறி, விடியற்காலையில அங்க வந்துடுறோம். நீ இருக்குறது திருப்பரங்குன்றத்துலதானே? நாம அங்கேயே முருகனை தரிசனம் பண்ணிட்டு, அங்கிருந்து திருச்செந்தூர், அப்புறம் மத்த படை வீடுகளுக்கும் அப்படியே போயிடலாம்," என்று செண்பகவடிவு மூச்சுவிடாமல் சொன்னார்.

தெய்வானைக்கு அதிர்ச்சியாக இருந்தது. "நான் எப்படிம்மா இங்க...?"

"அங்கயே வைதேகி வீட்ல இருடி... நாங்க காலையில வந்துடுறோம். நீ பத்திரமா இரு," என்று சொல்லிவிட்டு செண்பகவடிவு போனை வைத்தார்.

தெய்வானை ஒருகணம் திகைத்து நின்றாள். காலையில் ஆட்டோவில் அவளுடன் பயணம் செய்த அந்த முதியவர் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு நினைவுக்கு வந்தன. "நம்ம நினைச்சா முருகனைப் பார்க்க முடியாது... அவன் கூப்பிட்டால்தான் பார்க்க முடியும்."

காலையில் முருகனைப் பார்க்க முடியவில்லை என்று வருந்தியவளுக்கு, இப்போது ஆறுபடை வீடுகளையும் தரிசிக்க முருகன் அழைப்பு விடுத்தது போல் தோன்றியது.

தொடரும்...

இந்த அத்தியாயத்தைப் புகார் அளிக்க

மதிப்பீடு

முதல் மதிப்பீட்டை வழங்குங்கள்

மதிப்பீடு வழங்க உள்நுழையவும்

கருத்துகள்

கருத்து இட உள்நுழையவும்

கருத்துகள் இன்னும் இல்லை.