← ஏழாம் படை வீடு
அத்தியாயம் 4

அத்தியாயம் 4

963 சொற்கள் · முடிந்த கதை

மறுநாள் காலை விடிந்தது. ராஜரத்தினமும் செண்பகவடிவும் ஆறு மணி வாக்கில் வந்து சேர்ந்தனர். வைதேகியின் பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் குறித்தும், தெய்வானையின் ஜாதகத்தில் உள்ள கண்டம் குறித்தும் விவாதித்துவிட்டு, செண்பகவடிவு அவசரப்படுத்தினார்.

"நம்ம இப்போவே திருப்பரங்குன்றம் கோவிலுக்குக் கிளம்பணும். இங்கிருந்து ரொம்ப பக்கம்தானே, அதனால நடந்தே போயிடலாம்," என்று அவர் கூற, அனைவரும் சம்மதித்தனர்.

ராஜரத்தினம், செண்பகவடிவு, தெய்வானை ஆகிய மூவரும் வைதேகி குடும்பத்திடம் விடை பெற்றுவிட்டு திருப்பரங்குன்றம் நோக்கி நடக்கத் தொடங்கினர். மனம் முழுவதும் முருகனின் சிந்தனையாக, அரை மணி நேர நடையில் அவர்கள் கோவிலை அடைந்தனர்.

முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் குடைவரைக் கோவில் கம்பீரமாக நின்றிருந்தது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதைப் போல, அதை தரிசித்தபடியே அனைவரும் கோவிலுக்குள் நுழைந்தனர்.

சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த தெய்வானைக்கு, அந்த இடத்தின் வரலாறு குறித்துத் தெரிந்துகொள்ளும் ஆவல் மேலோங்கியது. அவள் எப்போதுமே எங்கு சென்றாலும் அந்த இடத்தின் பின்னணியைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவள். கோவில் வளாகத்தில் இருந்த ஒரு சிறிய புத்தகக் கடையின் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு முதியவரிடம், "ஐயா, இந்தக் கோவிலுக்கு ஏதாவது தனிப்பட்ட வரலாறு இருக்கா?" என்று கேட்டாள்.

அவர் புன்னகையுடன் அவளைப் பார்த்து, "அம்மாடி, இது முருகனோட முதல் படைவீடு. இங்கதான் முருகப்பெருமான் தெய்வானையைத் திருமணம் செஞ்சுகிட்டாரு. அதுமட்டுமில்லாம, இதுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கு," என்று சொல்லத் தொடங்கினார்.

" ஒரு காலத்தில் நக்கீரர் என்ற பெரிய சிவபக்தர் இருந்தார். சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க, அவர் இங்கே வந்து தவம் செய்தார். அப்போது அருகிலிருந்த குளத்தில் ஒரு இலை பாதி மீனாகவும் மீதி பறவையாகவும் மாறியதைக் கண்டு அவரது தவம் கலைந்தது.

அந்த சமயத்தில் ஒரு பூதம் சிவ வழிபாட்டிலிருந்து தவறிய பலரை பிடித்து குகையில் அடைத்து வைத்திருந்தது. நக்கீரரையும் அது பிடித்தது. அப்போது நக்கீரர் முருகனை நினைத்து திருமுருகாற்றுப்படை பாடினார். அவரின் பக்திக்கு இரங்கி முருகன் வந்து அந்த பூதத்தை சம்ஹாரம் செய்து, குகையை உடைத்து அனைவரையும் காப்பாற்றினார்.

பிறகு நக்கீரர் கங்கை நீரில் நீராடி பாவம் நீங்க வேண்டும் என்று வேண்டினார். அப்போது முருகன் தனது வேலால் பாறையைத் துளைத்து கங்கை நீரை பொங்கச் செய்தார். அதுதான் இன்றும் மலைமேல் இருக்கும் காசி தீர்த்தம்,” என்று விரிவாக விளக்கினார்.

அந்த முதியவர் சொன்ன வரலாற்றைக் கேட்டுக்கொண்டிருந்த தெய்வானையின் மனம் மீண்டும் ஒருமுறை முருகனின் அருளை எண்ணிச் சிலிர்த்தது. "ரொம்ப நன்றி ஐயா," என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஒரு உருவம் அவளைக் கடந்து சென்றது.

அது வேறு யாருமல்ல, பழநி மலையடிவாரத்தில் அவள் சந்தித்த அதே சித்தர்தான். அவரை மீண்டும் இங்கே பார்த்ததும் தெய்வானைக்கு ஒரு கணம் திகைப்பாக இருந்தது.

அவர் பார்ப்பதற்கு மிகவும் விசித்திரமாக இருந்தார். மேலாடை ஏதுமின்றி, இடுப்பிலிருந்து முழங்கால் வரை மட்டுமே ஒரு சிறிய பச்சை நிற வேட்டியைக் கச்சையாகக் கட்டியிருந்தார். அவரது நெற்றியில் பெரியதாகப் பட்டை விபூதி பூசப்பட்டிருந்தது. அவரது கருத்த தேகமும், கழுத்தில் கிடந்த ருத்ராட்ச மாலையும், கையில் இருந்த ஒரு காப்பும் அவரை ஒரு சித்தரைப் போலவே காட்டின. அவரது தலையில் முடிகள் முழுவதுமாக மழிக்கப்பட்டிருந்தது.

அவர் யாருடைய முகத்தையும் பார்க்கவில்லை. தன்னுள் தானே சத்தமாகப் பேசிக்கொண்டே நடந்தார்.

தெய்வானை அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டே நின்றாள். அவர் அவளைக் கடக்கும்போது, அவளைப் பார்க்காமலேயே, ஆனால் அவளுக்குத் தெளிவாகக் கேட்கும் விதமாக உரத்த குரலில் சொல்லத் தொடங்கினார்.

"முதல் இடத்துக்கு வந்துட்ட போல... இதுவே முடிவு இல்லை. இதைத் தவிர இன்னும் ஆறு இடம் இருக்கு... மொத்தம் ஏழு... ஆறு கிடையாது... புரிஞ்சுக்கோ... அவன் கூப்பிட்டுட்டான், நீ வந்துட்டாய்!"

என்று தனக்குத்தானே கத்திக்கொண்டே, கூட்டத்திற்குள் மெல்ல மெல்ல நடந்து மறைந்து போனார்.

தெய்வானை அவர் சென்ற திசையையே சிலையாய் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். 'மொத்தம் ஏழு... ஆறு கிடையாது' என்ற அவரது வார்த்தைகள் அவளுக்குள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தின. அவர் ஏன் அப்படிச் சொல்கிறார்? ஒருவேளை அவர் சொன்னதில் ஏதேனும் ரகசியம் ஒளிந்திருக்குமா?

இந்த எண்ணங்கள் அவளது மனதை ஆக்கிரமிக்க, செண்பகவடிவு அவளை அழைத்தார்.

"தெய்வானை, என்னடி அங்கேயே நிக்கிற? வா, சீக்கிரம் திருச்செந்தூருக்குக் கிளம்பலாம்," என்றார்.

குழப்பமான மனதுடனே தெய்வானை அங்கிருந்து கிளம்பினாள்.

"அம்மா... என்னோட யூடியூப் சேனல்க்கு மாசத்துக்கு ஒரு ஐயாயிரம், ஏழாயிரம் பேர்தான் பார்க்குறாங்க. எனக்கும் கொஞ்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் அதிகமாக்கணும்னு ஆசை இருக்குமா. திருப்பரங்குன்றம் மலைக்கு நாம நினைச்ச நேரத்துல எல்லாம் வந்துட முடியாது. அதனால, இங்க இருக்குற சிறப்புகளைப் பத்தி ஒரு காணொளி எடுத்துக்கட்டுமா? கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கம்மா, ப்ளீஸ்..." என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.

செண்பகவடிவு லேசாகச் சலித்துக்கொண்டாலும், மகளின் ஆசைக்காகச் சம்மதித்தார்.

உடனே தெய்வானை தன் அலைபேசியை எடுத்து, கோவிலின் கோபுரத்தைப் பின்னணியாக வைத்துப் பேசத் தொடங்கினாள். அந்தப் பெரியவர் சொன்ன நக்கீரர் வரலாறு, அவளுக்குக் கிடைத்த வேல், மற்றும் உள்ளே விசித்திரமாகப் பேசிய அந்தச் சித்தர் என அனைத்தையும் சேர்த்து விறுவிறுப்பாக ஒரு காணொளியைப் பதிவு செய்தாள்.

காணொளியை எடுத்து முடித்துவிட்டுத் திரும்பியவளின் கண்கள், சற்றுத் தொலைவில் இருந்த திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தின் மீது நிலைத்தன. அதைப் பார்த்த மறுகணம் அவளுக்குள் ஒரு பொறி தட்டியது. நேற்று ராஜவள்ளிபுரம் கொலைக் களத்தில், அந்த இரத்தக் கறையின் அருகே மண்ணில் கிடந்து அவள் எடுத்த அந்தச் சிறிய 'ஓம்' டாலர் அவளது நினைவுக்கு வந்தது.

ஒரு ஜர்னலிஸ்டாக, கொலை நடந்த இடத்தில் உள்ள ஒரு தடயத்தைத் தன்னிடம் மறைத்து வைத்திருப்பது சட்டப்படி பெரிய குற்றம் என்பது அவளுக்குத் தெரியும். அதை அப்படியே காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுவதுதான் சரி என்று முடிவு செய்தாள்.

"அப்பா, நீங்க இங்கேயே இருங்க, நான் இதோ வந்துடுறேன்," என்று சொல்லிவிட்டு, பெற்றோரைக் கோவில் வாசலிலேயே நிற்க வைத்துவிட்டு நேராகக் காவல் நிலையத்திற்குள் நுழைந்தாள்.

அங்கே ஒரு காவலர் நின்றுகொண்டிருந்தார். "ஐயா, நான் இன்ஸ்பெக்டரை பார்க்கணும்," என்று தெய்வானை கேட்டாள்.

அந்தக் காவலர் அவளை ஒருவித அலட்சியமாகப் பார்த்து, "கொஞ்ச நேரம் வெளில உட்காரு," என்று சற்று அதிகாரமாகக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, அவளை உள்ளே அழைத்தார்கள்.

உள்ளே இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தீவிரமான சிந்தனையில் அமர்ந்திருந்தார். தெய்வானை தயக்கத்துடன் அவர் முன்னே சென்று நின்றாள்.

"சொல்லுங்க, என்ன விஷயம்?" என்று அவர் நிமிர்ந்து பார்த்தார்.

"ஐயா, என் பேரு தெய்வானை. நான் பழனியில இருந்து வர்றேன். மீனாட்சி அம்மன் கோவில்ல ஒரு காணொளி எடுக்கலாம்னுதான் நேத்து மதுரைக்கு வந்தேன். ஆனா, ராஜவள்ளிபுரத்துல இருக்கிற என் தோழி வைதேகி எனக்குப் போன் பண்ணி, அவங்க ஊர்ல ஒரு கொலை நடந்திருக்கிறதா சொன்னா. நான் ஒரு ஜர்னலிசம் மாணவி, அதோடு செய்திகளுக்காக ஒரு பக்கமும் வச்சிருக்கேன். அந்த ஆர்வத்துல நேத்து அவ ஊருக்குப் போய், அந்த வீட்டின் பின்னாடி இருந்த மஞ்சள் கயிற்றுக்கு வெளியில நின்னு ஒரு பதிவு எடுத்தேன்."

அவள் சொல்லச் சொல்ல கார்த்திகேயனின் முகம் இறுகியது.

"அப்படி எடுத்துட்டு இருக்கும்போது, அந்த ரத்தக் கறைக்குப் பக்கத்துல ஏதோ ஒன்னு மினுமினுக்கிறதைப் பார்த்தேன். உள்ளே போயி ஒரு குச்சியை வச்சு, என் கைரேகை படாம அதை எடுத்துப் பார்த்தேன். அது ஒரு சின்ன ஓம் போட்ட டாலர். பயத்துல அதை என் பர்ஸ்ல வச்சிட்டேன். அப்புறம் யோசிச்சுப் பார்த்தப்போ, தடயத்தை மறைக்கிறது தப்புன்னு தோணுச்சு. அதான் உங்ககிட்ட ஒப்படைக்கலாம்னு வந்தேன்," என்று சொல்லியபடியே, தன் பர்ஸிலிருந்த அந்தச் சிறிய டாலரை எடுத்து அவர் மேஜையில் வைத்தாள்.

அதைப் பார்த்த கார்த்திகேயனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? இது எவ்வளவு முக்கியமான வழக்கு தெரியுமா? இறந்து போனவர் அந்த ஊர்லயே பெரிய செல்வாக்கு உள்ள மனுஷன். நீங்க பாட்டுக்குச் சாதாரணமா வந்து தடயத்தை எடுத்துட்டுப் போயிருக்கீங்க!" என்று குரலை உயர்த்திச் சத்தம் போட்டார்.

தெய்வானை அமைதியாக நின்றாள். கார்த்திகேயன் அவளை மேலும் கீழும் பார்த்தார். ஒரு பெண், அதுவும் பத்திரிகைத் துறை, அவளாகவே முன்வந்து பயமில்லாமல் தடயத்தைக் கொடுக்கிறாள், அதோடு கழுத்தில் ருத்திராட்ச மாலையும் அணிந்து முருக பக்தையாகவும் இருக்கிறாள் என்பதை யோசித்தார்.

சற்று அமைதியானவர், "சரி, நீங்க ஒரு பெண்ணா இருக்கிறதாலயும், தாமாகவே முன்வந்து உண்மையச் சொல்றதாலயும் இதோட விடுறேன். ஒரு பேப்பரைக் கொடுத்து உங்க பேரு, முகவரி, போன் நம்பர் எல்லாத்தையும் எழுதி வச்சிட்டுப் போங்க," என்று கண்டிப்பான குரலில் கூறினார்.

அவளும் அனைத்தையும் எழுதி வைத்துவிட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தாள். உள்ளே சென்று வர கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது.

வெளியே ராஜரத்தினம் எந்தச் சலிப்பும் இல்லாமல் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, செண்பகவடிவு மட்டும் கோபத்தில் கொதித்துக்கொண்டிருந்தார்.

"என்னடி இது தேவையில்லாத வேலை? உனக்கு எதுக்கு இந்த வேண்டாத பிரச்சனை எல்லாம்? போலீஸ், வம்பு தும்புன்னு இழுத்துக்கிட்டு போற," என்று புலம்பித் தள்ளினார்.

தெய்வானை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். நடந்ததெல்லாம் நல்லதுக்கே என்று மனதைத் தேற்றிக்கொண்டாள். பின்னர் மூவரும் அங்கிருந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்குப் புறப்பட்டனர்.

மாட்டுத்தாவணியில் திருச்செந்தூர் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்து அதில் ஏறினார்கள். பேருந்து மதுரையைத் தாண்டி தென் மாவட்ட நெடுஞ்சாலையில் வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது.

இரண்டாம் படைவீடு அவர்களை வரவேற்கக் காத்திருந்தது.

இந்த அத்தியாயத்தைப் புகார் அளிக்க

மதிப்பீடு

முதல் மதிப்பீட்டை வழங்குங்கள்

மதிப்பீடு வழங்க உள்நுழையவும்

கருத்துகள்

கருத்து இட உள்நுழையவும்

கருத்துகள் இன்னும் இல்லை.