← ஏழாம் படை வீடு
அத்தியாயம் 5

அத்தியாயம் 5

1,435 சொற்கள் · முடிந்த கதை

திருச்செந்தூரை நோக்கித் தெய்வானை, ராஜரத்தினம் மற்றும் செண்பகவடிவு மூவரும் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, அதன் எல்லையைத் தொட்டபோது இரவு மணி ஏழு ஆகியிருந்தது.

தூத்துக்குடி வழியாக வந்து சேர்ந்த அந்தப் பேருந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் வசித்த வீரபாண்டியபட்டிணத்தைக் கடந்தபோதே முருக பக்தர்களின் கூட்டம் கண்ணில் படத் தொடங்கியது. ஊரெங்கும் சாமிக்கு மாலை அணிந்த பக்தர்களும், 'அரோகரா' கோஷமுமாக திருச்செந்தூர் முழுவதும் ஒரு திருவிழாக் கோலம்பூண்டு இருந்தது.

பக்தர்களின் பெருங்கூட்டத்தைப் பார்த்த செண்பகவடிவு, "இங்க பாருங்க, கூட்டத்தை... "நாளைக்கு வியாழக்கிழமை… குருவின் நாள். திருச்செந்தூர் குருஸ்தலம். நாளைக்கு காலையில விஸ்வரூப தரிசனம் பார்த்து வழிபடுறது ரொம்ப சிறப்புங்க." என்று கணவரிடமும் மகளிடமும் சொன்னார்.

"ஆமாம்மா, நாளைக்குக் காலையில விஸ்வரூப தரிசனம் பாக்குறதுதான் ரொம்ப விசேஷம். இன்னைக்கு நாம ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்துலயோ இல்லைனா தங்கும் விடுதியிலயோ தங்கிக்கலாம். நாளைக்கு விடியற்காலையில எழுந்து, தரிசனம் பாக்கறதுக்குச் சரியா இருக்கும்," என்று ராஜரத்தினமும் தன் மனைவியின் வார்த்தைகளை ஆமோதித்தார்.

அதற்குள், அவர்கள் வந்துகொண்டிருந்த பேருந்து மெல்ல நகர்ந்து திருச்செந்தூர் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில், பேருந்தின் முன்னால் ஒரு விலையுயர்ந்த கருப்பு நிற BMW கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரை ஓட்டிக்கொண்டிருந்தவன் திடீரென்று எந்த சிக்னலும் இல்லாமல் காரை நிறுத்தினான். இதை சற்றும் எதிர்பாராத பேருந்து ஓட்டுநர், வேகமாகக் காரின் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்தார். இருப்பினும், பேருந்தின் முன்பக்கம் காரின் பின்பக்கத்தை லேசாக இடித்துவிட்டது.

காரின் பின்பக்கம் நன்றாகவே சேதமடைந்துவிட்டது. காரிலிருந்து ஒரு 38 வயது மதிக்கத்தக்க நபர் கோபமாக இறங்கினார். அவர் அணிந்திருந்த வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, கழுத்தில் கிடந்த தடிமனான தங்கச் சங்கிலி என அனைத்தும் அவரை ஒரு பெரும் பணக்காரர் என்பதைக் காட்டியது.

"என்னப்பா, கண்ணு தெரியலையா? இது எவ்வளவு பெரிய கார்னு உனக்குத் தெரியுமா? இப்படியா இடிச்சு வைப்ப?" என்று பேருந்து ஓட்டுநரிடம் கோபமாகக் கத்தினார்.

பேருந்து ஓட்டுநரும், "நீங்க திடீர்னு பிரேக் அடிச்சா நான் என்ன சார் பண்ண முடியும்?" என்று பதிலுக்குக் கேட்க, வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறியது. காரிலிருந்த அந்தப் பணக்காரர், ஓட்டுநரை அடிக்கவும் கை ஓங்கினார்.

இந்தச் சத்தம் கேட்டு காரிலிருந்து 33வயது மதிக்கத்தக்க பெண்மணி இறங்கி வந்தார். அவரைப் பார்த்தவுடனே, அவர் ஒரு மிகவும் சாந்தமான, அமைதியான பெண் என்பது தெரிந்தது. அவரும் அந்தப் பணக்காரரைப் போலவே, கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலிகள் அணிந்திருந்தாலும், அதில் இருந்த ஓம் டாலர் மற்றும் முருகனின் வேல் அவரை ஒரு சிறந்த முருகப் பக்தையாகக் காட்டியது.

"என்னங்க, இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க? நாம வந்திருக்கிறது திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்கிறதுக்காக, ஒரு நேர்த்திக்கடனைச் செலுத்தறதுக்காக. இந்தக் கோவில்ல வந்து சண்டை போடலாமா? இதுல பெரிய தப்பெல்லாம் ஒன்னும் இல்ல. கார் அடிபட்டுருச்சுன்னா, இன்சூரன்ஸ்ல பாத்துக்கலாம். விடுங்க, நாம சாமியப் பாக்கப் போலாம்," என்று தன் கணவரை சமாதானப்படுத்தினார்.

பேருந்தில் வலதுபுறமாக, ஓட்டுநருக்குப் பின்னால் அமர்ந்திருந்த தெய்வானை இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் நெற்றியில் இருந்த பட்டை விபூதியும், கழுத்தில் கிடந்த ஓம் டாலர் மற்றும் வேலும், அவள் கூறிய சாந்தமான வார்த்தைகளும், அவளை ஒரு பெரும் முருக பக்தையாகத் தெய்வானைக்கு அடையாளப்படுத்தின. அதைப் பார்த்த தெய்வானைக்கு அந்தப் பெண்ணின் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டது.

கணவனைச் சமாதானப்படுத்திவிட்டு, அந்தப் பெண் மீண்டும் காரில் ஏறினார். காரும் பேருந்தும் தத்தம் வழியில் சென்றன.

சில நிமிடங்களில் பேருந்து திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் வந்து நின்றது.

பேருந்திலிருந்து இறங்கிய தெய்வானை, முதன்முறையாகத் திருச்செந்தூர் மண்ணில் கால் பதித்தாள்.

திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அந்த மூவரையும், கடலிலிருந்து வீசிய உப்புக் காற்று மெதுவாக வந்து தழுவியது.

பழநி மலையடிவாரத்தில் பிறந்து வளர்ந்த தெய்வானைக்கு அந்தக் காற்று முற்றிலும் புதிதாக இருந்தது. இதுவரை அவள் சுவாசித்த காற்றில் மலையின் மணமும், விபூதியின் வாசனையும் கலந்திருந்தது. ஆனால் இங்கே வீசிய காற்றில் கடலின் உப்பும், அதனோடு சேர்ந்து கோவிலில் எரியும் கற்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தியின் மணமும் கலந்து ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது.

அவள் தன்னையும் அறியாமல் ஒரு பெருமூச்சு இழுத்து அந்தக் காற்றை முழுமையாக சுவாசித்தாள்.

ஏதோ ஒரு ஆன்மீக வாசனை…

ஏதோ ஒரு தெய்வீக உணர்வு…

இந்த மண்ணில் கால் வைத்த உடனேயே, செந்தூர் முருகன் தன்னை அப்படியே அரவணைத்துக் கொண்டது போல அவளுக்குள் ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டது.

சுற்றிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.

“செந்தூர் முருகனுக்கு அரோகரா!”

“திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா!”

என்ற கோஷங்கள் நாலாபுறமும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தன.

அந்த அரோகரா முழக்கம் அவளது காதுகளில் விழுந்த ஒவ்வொரு முறையும், உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பு பரவியது.

ராஜரத்தினமும் சுற்றிலும் இருந்த கூட்டத்தைப் பார்த்தபடியே மெதுவாக,

“ஏம்மா… கோயில் இங்கிருந்து கொஞ்சம் தூரம்தான் இருக்கும் போல. இந்நேரத்துக்கு ரூம் போட்டுத் தங்கிக்கிட்டு, காலையில எழுந்து விஸ்வரூப தரிசனம் பாக்கலாம். ஒரு ஆட்டோ பிடிச்சுப் போயிரலாமா?” என்று கேட்டார்.

உடனே செண்பகவடிவு மறுத்தார்.

“இல்லங்க… ரூம் வேண்டாம். திருச்செந்தூர்ல கல் மண்டபத்துல தங்குறது ரொம்ப விசேஷம்னு நிறைய பேரு சொல்லக் கேட்டிருக்கேன். நாமளும் அங்கேயே தங்கிக்கலாம். காலையில எழுந்து நேரா சாமி தரிசனம் பண்ணலாம்,” என்றார்.

அதைக் கேட்ட ராஜரத்தினம் சற்றுத் தயங்கினார்.

“இல்லம்மா… வயசுப் பொண்ணு வேற நம்ம கூட இருக்கா. வெளியில தங்குறது சரியா இருக்கும்?”

அவரது தயக்கத்தைப் புரிந்துகொண்ட தெய்வானை புன்னகையுடன் அப்பாவைப் பார்த்தாள்.

“ஏம்ப்பா… இது சூரனையே சம்ஹாரம் பண்ண முருகன் இருக்குற இடம். இந்த திருச்செந்தூர் முருகன் காவலா இருக்கும்போது நமக்கு என்னப்பா பயம்? ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்குற இடம்தானே அது. நாமளும் அங்கேயே தங்கி, நாளைக்கு நேர்த்திக்கடனை முடிச்சிட்டு கிளம்பலாம்,” என்றாள் உறுதியுடன்.

மகளின் வார்த்தைகளைக் கேட்ட ராஜரத்தினம் சில நொடிகள் அமைதியாக நின்றார்.

பிறகு மெதுவாகச் சிரித்தபடி,

“சரி… நீங்க ரெண்டு பேரும் சொல்றதால அப்படியே பண்ணிடலாம்,” என்று சம்மதித்தார்.

அவர்கள் மூவரும் ஆட்டோ நிறுத்தத்தை நோக்கி இரண்டு அடி நடந்தார்கள்.

அப்போது தெய்வானை திடீரென்று நின்றுவிட்டாள்.

“என்னமா?” என்று ராஜரத்தினம் கேட்டார்.

“அப்பா… நாம எல்லா ஊருக்கும் போனாலும் ஆட்டோலதான் போறோம். இந்த திருச்செந்தூரை நாம சரியா பார்த்ததே இல்ல. நடந்தே போனா இந்த ஊரோட சூழ்நிலையும், மக்களையும், கோயிலைச் சுற்றியிருக்கிற இடங்களையும் பார்க்க முடியும். கல் மண்டபம் வரைக்கும் நடந்தே போயிடலாமாப்பா?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

அவள் கேட்டதைக் கேட்ட செண்பகவடிவும் உடனே,

“அதுவும் சரிதாங்க. அவசரம் ஒன்னும் இல்ல. நடந்தே போவோம்,” என்றார்.

“சரி… வாங்க,” என்று ராஜரத்தினமும் சம்மதித்தார்.

மூவரும் மெதுவாக அந்தப் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து, திருச்செந்தூர் நகரின் சாலைகளில் நடந்தபடியே கல் மண்டபத்தை நோக்கி தங்களுடைய பயணத்தைத் தொடங்கினார்கள்.

திருச்செந்தூர் நகரின் இரவு நேரமும் பக்தர்களின் பரபரப்பால் உயிர்ப்போடு இருந்தது. கோவிலை நோக்கிச் செல்லும் சாலையின் இருபுறமும் சிறிய சிறிய கடைகள் வரிசையாக இருந்தன. எங்குப் பார்த்தாலும் முருகனின் படங்கள், வேல்கள், மாலைகள், பஞ்சாமிர்தம், கடலை மிட்டாய், பக்திப் பொருட்கள் என்று வியாபாரம் களைகட்டியிருந்தது.

அந்தக் கூட்டத்தைக் கடந்து மூவரும் மெதுவாக நடந்துகொண்டிருந்தார்கள்.

அப்போது சாலையோரத்தில் இருந்த ஒரு சைவ உணவகத்தில், பெரிய அடுப்பின் மீது இட்லி பானை கொதித்துக்கொண்டிருந்தது. பானையின் மூடியை எடுத்தவுடன், வெந்நீரின் ஆவியோடு சேர்ந்து சுடச்சுட வெந்த இட்லியின் மணம் அந்தச் சாலையெங்கும் பரவியது.

அந்த மணம் தெய்வானையின் மூக்கைத் துளைத்தது.

காலையிலிருந்து பயணம்… மதியம் சரியாகச் சாப்பிடாதது… மாலை முழுவதும் பேருந்துப் பயணம்…

அத்தனை சோர்வும் சேர்ந்திருந்ததால், அவளது வயிறு பசியை நினைவுபடுத்தியது.

அவள் தன் அப்பாவைப் பார்த்து சிரித்தபடியே,

“ஏம்ப்பா… ரொம்பப் பசிக்குது. இங்க சாப்பிட்டுட்டுப் போயிரலாமாப்பா?” என்று கேட்டாள்.

ராஜரத்தினமும் புன்னகைத்தார்.

“எனக்கும் அதேதான் தோணிச்சும்மா. வா… முதல்ல சாப்பிட்டுட்டுப் போயிடலாம்,” என்றார்.

செண்பகவடிவும் சம்மதமாகத் தலையசைத்தார்.

மூவரும் அந்தச் சைவ உணவகத்திற்குள் சென்றனர்.

அங்கே ஏற்கனவே நிறைய பக்தர்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு மூலையில் மூவருக்கும் இடம் கிடைத்ததும் அமர்ந்தார்கள்.

வாழை இலையை விரித்து வைத்த ஊழியர், சுடச்சுட இட்லிகளை எடுத்துவந்து வைத்தார். அதனுடன் தேங்காய் சட்னி, காரச் சட்னி, சாம்பார் என்று பரிமாறினார்.

பயணக் களைப்பில் இருந்த மூவருக்கும் அந்த எளிமையான இரவு உணவே அமிர்தமாக இருந்தது.

அமைதியாகச் சாப்பிட்டு முடித்துவிட்டு, கைகளை அலம்பிக்கொண்டு வெளியே வந்தார்கள்.

மீண்டும் தங்களது நடைப்பயணம் தொடங்கியது.

கோவிலை நோக்கிச் செல்லும் தேரடி வழியாக மெதுவாக நடந்தார்கள்.

இரவு மணி எட்டு முப்பதை நெருங்கியிருந்தது.

சில நிமிடங்களில் அவர்கள் தேரடியை வந்தடைந்தார்கள்.

அங்கே கம்பீரமாக உயர்ந்து நின்ற செந்தூர் முருகனின் ராஜகோபுரம், இரவு மின் விளக்குகளின் ஒளியில் இன்னும் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது.

அந்தக் கோபுரத்தைப் பார்த்தவுடனே மூவரும் தன்னிச்சையாகக் கைகளைக் கூப்பி வணங்கினார்கள்.

அதே நேரத்தில் கடலிலிருந்து இடைவிடாமல் வந்து மோதிக்கொண்டிருந்த அலைகளின் ஓசை, “நான் இருக்கிறேன்… நான் இங்குதான் இருக்கிறேன்…” என்று சொல்லாமல் சொல்வது போல அவர்களது மனதை வருடியது.

சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் பக்தர்கள் மட்டுமே.

“அரோகரா…”

“செந்தூர் முருகனுக்கு அரோகரா…”

என்ற முழக்கங்கள் அவ்வப்போது எழுந்து அந்த இடமே பக்தி வெள்ளத்தில் மிதப்பது போல ஒரு சூழலை உருவாக்கின.

கோவிலுக்கு எதிரே இருந்த கல் மண்டபம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.

குடும்பம் குடும்பமாக…

காவடி எடுத்து வந்த பக்தர்கள்…

விரதமிருந்து வந்த முதியவர்கள்…

சிறு குழந்தைகளோடு வந்த பெண்கள்…

எல்லோரும் மறுநாள் அதிகாலையில் விஸ்வரூப தரிசனம் செய்வதற்காக அங்கேயே தங்கியிருந்தார்கள்.

அவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரு சிறிய இடம் கூட காலியாக இல்லை.

ராஜரத்தினம் மட்டும் விடாமல் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.

சிறிது நேரம் தேடிய பிறகு, இரண்டு குடும்பங்களுக்கு நடுவில் ஒருவர் படுக்கும் அளவுக்குக் கூட இல்லாத ஒரு சிறிய இடம் காலியாக இருப்பதைக் கவனித்தார்.

“இங்க கொஞ்சம் இடம் இருக்கும்மா… வாங்க,” என்று மனைவியையும் மகளையும் அழைத்தார்.

வரும் மெதுவாக கூட்டத்திற்கு இடையூறு இல்லாமல் அந்த இடத்திற்குச் சென்றார்கள்.

செண்பகவடிவு தாங்கள் கொண்டு வந்திருந்த போர்வைகளில் ஒன்றை எடுத்தார்.

அதை மடித்து அந்தச் சிறிய இடத்தில் விரித்தார்.

பிறகு மூவரும் ஒருவருக்கொருவர் ஒட்டி அமர்ந்துகொண்டனர்.

சுற்றிலும் பக்தர்களின் பேச்சுச் சத்தமும், கடலலையின் ஓசையும், கோவில் மணி ஒலியும் ஒன்றோடு ஒன்று கலந்த அந்த இரவு, அவர்களுக்கு ஒரு வித்தியாசமான ஆன்மீக அமைதியைக் கொடுக்க ஆரம்பித்தது.

அதே நேரத்தில், திருச்செந்தூர் நகரின் மையப்பகுதியில் இருந்த கந்த விலாஸ் தங்கும் விடுதியில், தெய்வானை பேருந்தில் பார்த்த அந்த முருக பக்தையான பெண்ணும், அவளது கணவரும் தங்கியிருந்தார்கள்.

அறைக்குள் நுழைந்ததிலிருந்து அந்த மனிதரின் முகத்தில் இருந்த கோபம் இன்னும் குறையவே இல்லை.

கதவை சற்றுக் கோபமாகச் சாத்திவிட்டு, கையில் இருந்த கார் சாவியை மேஜையின் மீது வீசினார்.

“பாரு அபிராமி… வர்ற வழியிலேயே கார் இடிச்சிருச்சு. ஏற்கனவே இந்த ட்ரிப் வர்றதுல எனக்கு இஷ்டமே இல்ல. நீதான் ‘திருச்செந்தூர் போகணும்… நேர்த்திக்கடனை முடிக்கணும்’ன்னு அடம்பிடிச்சு கூட்டிட்டு வந்த. இப்ப பாரு… காரை சர்வீஸ் சென்டர்ல விடணும். அதுக்கு தனியா செலவு. தேவையில்லாம டென்ஷன் மேல டென்ஷன்.”

அவர் எரிச்சலோடு பேசிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார்.

அபிராமி மட்டும் அமைதியாக அவரைப் பார்த்தாள்.

அவளது முகத்தில் கோபமோ, வருத்தமோ இல்லை.

மெல்ல அவருக்கு எதிரே வந்து அமர்ந்தாள்.

“ராஜேஷ்… நாம இங்க வந்தது சுத்திப் பார்க்க இல்ல. நேர்த்திக்கடனை நிறைவேற்றத்தான் வந்திருக்கோம்.”

அவர் அமைதியாக இருந்தார்.

“முருகனுக்கு நாம் சமர்ப்பிக்க வேண்டிய வேலைக் கொண்டு வந்திருக்கோம். நாளைக்கு காலையில அதைச் செலுத்தணும். அதுக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தோம்.”

ராஜேஷ் பெருமூச்சு விட்டார்.

அபிராமி மெதுவாகத் தொடர்ந்தாள்.

“நம்ம ஒரு காலத்துல எப்படி இருந்தோம்னு உங்களுக்கு மறந்துடுச்சா? ஒரு சின்ன பிசினஸை ஆரம்பிக்கக் கூட காசு இல்லாம கஷ்டப்பட்டோம். ஒவ்வொரு நாளும் யாராவது உதவி பண்ணுவாங்களான்னு எதிர்பார்த்த காலமும் இருக்கு.”

அவளது கண்கள் லேசாகக் கலங்கின.

“ஆனா, இப்போ பாருங்க… முருகனோட அருளாலதான் இவ்வளவு முன்னேறி இருக்கோம். நம்ம நினைக்காத அளவுக்கு வசதியா வாழ்றோம். இதுக்கெல்லாம் காரணம் அவன்தான். அதனாலதான் இந்த நேர்த்திக்கடனை எப்படியாவது முடிக்கணும்னு நான் பிடிவாதமா இருந்தேன்.”

ராஜேஷ் எதுவும் பேசவில்லை.

அபிராமி சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

“ஆனாலும்…”

அந்த ஒரு வார்த்தையோடு அவளது குரல் தழுதழுத்தது.

“நமக்குக் கல்யாணம் ஆகி ஆறு… ஏழு வருஷம் ஆகிடுச்சு. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கல.”

அவள் மெதுவாகத் தலையைக் குனிந்தாள்.

“இந்த நேர்த்திக்கடனை இன்னும் நிறைவேற்றாததுதான் அதுக்குத் தடையா இருக்குமோன்னு எனக்கு அடிக்கடி தோணும். அதனாலதான் இந்த முறை எப்படியாவது வந்துடணும்னு நினைச்சேன்.”

ராஜேஷ் அவளைப் பார்த்தார்.

“நாளைக்கு மனசார இந்த நேர்த்திக்கடனை முடிச்சிட்டு, முருகன்கிட்ட மனம் உருகி வேண்டிக்கிட்டு போவோம். கண்டிப்பா அடுத்த வருஷத்துக்குள்ள நமக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.”

அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் அசைக்க முடியாத நம்பிக்கை தெரிந்தது.

ஆனால் ராஜேஷ் சிரித்தபடியே தலையசைத்தார்.

“அபிராமி… இப்போ மருத்துவத்துல ஆயிரத்தெட்டு ட்ரீட்மென்ட் இருக்கு. குழந்தை பிறக்கணும்னா அதுக்கான வழி மருத்துவ ரீதியாத்தான் இருக்கு. சாமி வந்து நேரா குழந்தையைக் கொடுத்துடுவார்னு நான் நம்ப மாட்டேன்.”

அவர் சற்று இடைவெளி விட்டார்.

“நாமளும் இதுவரைக்கும் முயற்சி பண்ணியாச்சு. ஆனா நடக்கல. அதனால இனிமே மருத்துவ ரீதியா முயற்சி பண்ணலாம்னுதான் நான் சொல்றேன்.”

அபிராமி மெதுவாகப் புன்னகைத்தாள்.

“நீங்க சொல்றது எனக்குப் புரியுது ராஜேஷ்.”

அவள் அமைதியாக அவரது கையைப் பிடித்தாள்.

“இந்த ஒரு நேர்த்திக்கடனை மட்டும் முடிச்சிடுவோம். அதுக்கப்புறம் இன்னும் ஆறு மாசம் இறைவனை முழுசா நம்பி முயற்சி பண்ணுவோம். நீங்களும் எந்தக் குழப்பமும் இல்லாம நம்பிக்கையோட இருங்க.”

சில நொடிகள் அமைதி நிலவியது.

“அந்த ஆறு மாசத்துக்குள்ளயும் எதுவும் நடக்கலைன்னா…”

அவள் அவரது கண்களைப் பார்த்தாள்.

“நீங்க சொல்ற மாதிரியே நாம மருத்துவ சிகிச்சைக்கு போயிடலாம்.”

அபிராமியின் குரலில் இருந்த நம்பிக்கையையும், கண்களில் தெரிந்த ஏக்கத்தையும் பார்த்த ராஜேஷ் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

இந்த அத்தியாயத்தைப் புகார் அளிக்க

மதிப்பீடு

முதல் மதிப்பீட்டை வழங்குங்கள்

மதிப்பீடு வழங்க உள்நுழையவும்

கருத்துகள்

கருத்து இட உள்நுழையவும்

கருத்துகள் இன்னும் இல்லை.